தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும், தமிழ்பக்கம் நாளை விபரமாக பதிவிடும். இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய விடயமான- ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்றைய கூட்டத்தில் நீண்டநேரம் விவாதிக்கப்பட்ட விடயம்- ஜெனீவா விவகாரம்தான்.
இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்துகிறார்கள், தமிழ் அரசியல் கட்சிகளும் வலியுறுத்துகின்றன, போதாதற்கு இப்பொழுது மைத்திரியும் வலியுறுத்துகிறார். இந்த நிலைமையில் எப்படி இந்த விடயத்தை கையாளலாமென இன்று சுமார் 20 நிமிடங்கள் கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆலோசித்தனர்.
ஜனாதிபதியின் இன்றைய அறிவிப்பின் மூலம், ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை தோல்வியடையவும் வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. பிந்தைய நிலவரப்படி, பிரேரணைக்கு ஆதரவான தமது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். சில தூதரக தொடர்புகளின் ஊடாக இந்த தகவல் கிடைத்திருக்கலாமென கருதப்படுகிறது.
இலங்கை தனது பிரச்சனையை தானே கவனித்துக் கொள்ளும் என ஜனாதிபதியின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் அறிவித்தால், ஜனாதிபதியை – நாட்டை – பகைத்துக் கொள்ள நாடுகள் விரும்பாது. அதனால் அவை பிரேரணைக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கலாமென உத்தியோகப்பற்றற்ற முறையில் கிடைத்த தகவலை, கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆராய்ந்தனர்.
சர்வதேச கண்காணிப்பு பொறிமுறையொன்றின் கீழ் இலங்கையை வைத்திருப்பது அவசியம் என்பதை இன்று கூட்டமைப்பு எம்.பிக்கள் ஏகோபித்து எடுத்தனர். ஆனால், புதிய நெருக்கடி நிலைமையில், அமை எப்படி கையாள்வதென்பது தொடர்பில் இன்று உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. நாளையும் தொடர்ந்து பேசுவதென முடிவாகியுள்ளது.