இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனை முஸ்லிம் தனியார் சட்டத்துடன் தொடர்புபட்டுள்ள முஸ்லிம் பெண்களின் மனித உரிமை குறித்து பரவலான விவாதங்களைக் கிளப்பிவிட்டிருக்கின்றது.
ஜிஎஸ்பி வரிச்சலுகைகளைப் பெறுவதாக இருந்தால், இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ள ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான சாசனங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்திருக்கின்றது.
இதில் குறிப்பாக பெண்களுக்கான சர்வதேச திருமண வயதெல்லை பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பிலான ஐநாவின் சாசனங்களுக்கு அமைவாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதே இந்த விவாதங்களுக்கு அடிப்படையாகியிருக்கின்றது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்ககைகளை எடுத்துள்ள நல்லாட்சி அரசாங்கம், அது குறித்து பொதுமக்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் பெறுவதற்கான அமர்வுகளை நடத்தியது.
இந்த அமர்வுகளில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக பல மகளிர் அமைப்புக்கள் ஆலோசனைகளை முன்வைத்திருந்தன. அவற்றில் முஸ்லிம் பெண்களுக்கான உரிமைகள் பற்றிய விடயம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
குறிப்பாக விவாகம் மற்றும் விவாகரத்து விடயத்தில் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டி, இதற்கு அடிப்படையாக அமைந்துள்ள அரசியலமப்பின் 16 (1) உறுப்புரிமை நீக்கப்பட வேண்டும். அல்லது அதில் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பெண்கள் செயற்பாட்டுக்கான வலையமைப்பு என்ற மகளிர் அமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான கருத்தறியும் அமர்வுகளில் முஸ்லிம் பெண்களின் ஊடாக பரவலாகக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.
இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில்தான் ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கு மனித உரிமைகள் உரிய முறையில் பேணப்பட வேண்டும்.
அதிலும் குறிப்பாக பெண்கள் சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவைகள் ஐநா சாசனங்களுக்கு அமைவாக அரசாங்கத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்டவாறாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை வெளிப்பட்டிருந்தது.
ஆயினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிபந்தனை, முஸ்லிம் பெண்களின் உரிமைகளில் தலையிடுவதாகவும், முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கின்றது என்ற வகையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
முஸ்லிம் பெண்களுக்கான உரிமைகள் என்பது முஸ்லிம் மதம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடையது. அவற்றுடன் இரண்டறக் கலந்தது. எனவே, இந்த விடயங்களில் வெளிச் சக்திகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று முஸ்லிம் தலைவர்கள் கொதித்தெழுந்தார்கள்.
தங்களுடைய மத உரிமைகளை ஜிஎஸ்பி வரிச் சலுகைக்குப் பலி கொடுக்க முடியாது. அத்தகைய செயற்பாடுகளுக்கு தாங்கள் ஒருபோதும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் உரத்து குரல் எழுப்பினார்கள். போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றார்கள்.
எனினும் ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லிம் பெண்களுடைய உரிமைகள் தொடர்பாகவோ முஸ்லிம் மத விவகாரங்களிலோ அல்லது அந்த மக்களுடைய கலாசாரத்திலோ தாங்கள் தலையிடவுமில்லை. அந்த வகையில் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவுமில்லை என மறுதலித்துள்ளது.
இலங்கையில் சிறுவர் திருமணம் அதிகரித்திருப்பதனால் சர்வதேச திருமண வயதெல்லைக்குரிய நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தாங்கள் கோரியிருப்பதாக இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
ஆயினும் அந்த விடயம் முற்றுப் பெறவில்லை. பகிரங்க விவாதமாகியிருக்கின்றது.
ஏன் இந்த நிலைமை?
முஸ்லிம் தனியார் சட்டமானது இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட ஒரு சட்டமாகும். இது அவர்களுடைய மதம், கலாசாரம் என்பவற்றை உள்ளடக்கியதாக அவர்களுக்கு மட்டுமே உரியதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆள்சார் சட்டம் ஆதனம் சார் சட்டம் என இரண்டு பிரிவுகளை அது கொண்டிருக்கின்றது.
திருமணம், பலதார மணம், விவாகரத்து, பராமரிப்பு, பிரதி பலன்களை எதிர்பார்க்காத கொடைகள், பருவமடைதல், தத்தெடுத்தல், பிள்ளைகளின் பாதுகாப்பு, திருமணம் செய்யத் தடுக்கப்பட்டோர், சீதனம் (கைக் கூலி) என்பவற்றை ஆள்சார் சட்டம் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டமாகிய விவாகம், விவாகரத்து என்பவற்றை நடைமுறைப்படுத்துகின்ற காதி நீதிமன்றம் அமைந்துள்ளது. காதிகள் விவாகரத்து சம்பந்தமாக எழுகின்ற பல்வேறு பிரச்சினைகள் இதன் ஊடாகத் தீர்வு காணப்பட்டு வருகின்றன.
இருப்பினும் முஸ்லிம் பெண்களுக்கான திருமண வயது தொடர்பிலான சர்ச்சை முஸ்லிம் தனியார் சட்டமாகிய விவாகம் மற்றும் விவாகரத்து விடயத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது.
பதின்மூன்று வயதில், விபரம் தெரியாத பருவத்தில் பெண்களுக்குத் திருமணம் செய்யும் வழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று முஸ்லிம் பெண்களின் உரிமைக்காகச் செயற்படுகின்ற மகளிர் அமைப்புக்கள் கோரி வருகின்றன. ஆயினும் முஸ்லிம் அரசியலமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள சட்டத்திற்கு உட்பட்ட இந்த விடயத்தில் முஸ்லிம் மதத் தலைவர்களே முடிவெடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்த வேண்டுகோள் இன்னும் கோரிக்கை வடிவத்திலேயே தேங்கிக் கிடக்கின்றது.
புதிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு எடுத்துள்ள நடவடிக்கையை தமக்கான ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதி முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காகச் செயற்படுகின்ற அமைப்புக்கள் இந்தச் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முனைந்திருக்கின்றன.
இலங்கையில் பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், 13 வயதுடைய சிறு பராயத்திலேயே அவர்களின் விருப்பத்திற்கு இடம்கொடுக்காமலேயே முஸ்லிம் திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன என்று அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பாடசாலை சென்று கல்வி கற்க வேண்டிய பருவத்தில் தங்களுடைய விருப்பத்திற்கு மாறாக தங்களைத் திருமண பந்தத்தில் இணைத்ததனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தாங்கள் முகம் கொடுக்க நேர்ந்திருப்பதாக திருமண முறிவுக்கு உள்ளாகிய பல முஸ்லிம் பெண்கள் கூறுகின்றார்கள்.
தங்களைத் திருமணம் செய்த ஆண்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில் தங்களைக் கைவிட்டுச் சென்றிருப்பதாகவும், பலர் தனிமையிலும், பலர் குழந்தைகளுடனும் வாழ்வதற்காகப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.
பெண்கள் 18 வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்று நாட்டின் அடிப்படை உரிமைச்சட்டம் கூறுகையில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் 13 வயதில் பெண்களை திருமணம் செய்வதை எவ்வாறு அனுமதிக்க முடியும் என்பது முஸ்லிம் பெண்களின உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின் முக்கியமான கேள்வியாகும்.
அரசியலமைப்பின் 16 (1) உறுப்புரையானது, முஸ்லிம் தனியார் சட்டம், கண்டியச் சட்டம், யாழ்ப்பாணத்திற்குரிய தேச வழமைச் சட்டம் என்பவற்றை சட்ட ரீதியானது என அங்கீகரித்துள்ளது. இந்தச் சட்டங்களில் மரபு வழியாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற வழமைகள் – முறைமைகள் சட்ட வலுவுள்ளவை என அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய இனக்குழுமங்களுக்கான அந்தந்தப் பிரதேச வழக்குகள் வழமைகளுக்கு அமைவாக இலங்கைக்கான அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்த வழமைச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
அதன் காரணமாகவே அரசியலமைப்பை உருவாக்கிய அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் இந்தச் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாமல், அப்படியே அவற்றை அரசியலமைப்பில் உள்ளடக்கியிருக்கின்றார்கள்.
இவற்றில் முஸ்லிம் தனியார் சட்டமே மிகுந்த வாதப் பிரதிவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றது.
சட்டத் திருத்தத்திற்கான முயற்சியும் தற்போதைய நிலைமையும்
முஸ்லிம் தனியார் சட்டத்தில், குறிப்பாக முஸ்லிம் விவாகம் மற்றும் விவாரகத்து சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகள் கடந்த கால் நூற்றாண்டுகளாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆயினும், அந்த முயற்சிகள் இன்னும் கைகூடி வரவில்லை.
இந்தச் சட்டத் திருத்தத்திற்காக இதுவரையில் நான்கு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போ நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட முஸ்லிம் தனியார் சட்டத்தில் முக்கியமான சில திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காக நீதியரசர் சலீம் மர்ஸுப் தலைமையில் ஒரு குழுவை நியமித்திருந்தார். அந்தக் குழுவும் தனது முடிவுகளை இன்னும் அறிவிக்கவில்லை. பிந்திய தகவலின்படி இந்த மாதம் அதாவது நம்பர் மாதத்தில் அந்த அறிக்கை வெளிவரும் என பலதரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு முஸ்லிம் தனியார் சட்டத்தில் முஸ்லிம் விவாகம் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் அல்லது மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற சூழலில் ‘சம உரிமையற்ற குடிமக்கள்: இலங்கையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான முஸ்லிம் பெண்களின் போராட்டம்’ என்ற தலைப்பில் இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்று இளவயது திருமணத்தினால் முஸ்லிம் பெண்கள் அனுபவிக்கின்ற சொல்லொணாத துயரங்கள் கஷ்டங்கள் குறித்து பல விடயங்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மனித உரிமைகள் தொடர்பில் பணியாற்றி வருகின்ற முஸ்லிம் பெணிகளினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். இந்த நாட்டில் சமத்துவமான உரிமையற்றவர்களாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அந்த அறிக்கை குற்றம் சுமத்தியிருக்கின்றது.
பாதிக்கப்பட்ட பல பெண்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கஸ்டங்கள், இடையூறுகள் பற்றியும் அவற்றினால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உள நெருக்கீடுகள், கைவிடப்பட்ட கணவன்மாரினால் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள உடல் ரீதியான பாதிப்புகள் என்பன பற்றி 61 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டிருக்கின்றது.
இளவயதில் திருமணமாகி விவாகரத்து பெற முடியாமலும், தமது பிள்ளைகளுக்கும் தங்களுக்கும் பராமரிப்புக்கான உதவிகளைப் பெற முடியாமலும், இன்னும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ள 14 வயது தொடக்கம் 26 வயது வரையிலான பெண்கள் தமது வாழ்க்கைத் துயரங்களை இந்த அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
பெண்களின் அவல நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கை, மதம், இனம் என்ற பேதமின்றி பெண்களுக்கு ஆகக் குறைந்த திருமண வயது 18 என்ற சட்ட விதியை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அதனை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும்கூட, சிறுவர் திருமணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை அனுமதிக்க முடியாது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
அத்துடன், இளவயது திருமணத்தின் மூலம் பெண்கள் பாதிக்கப்படுவதை சட்ட ரீதியாக அனுமதித்துள்ள முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட வலுவை, புதிய அரசியலமைப்பில் நீக்கி, முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களுக்கு நியாயமான திருமண வயதெல்லை ஒன்றை நிர்ணயிக்க விரும்பாதவர்கள் அமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் மிகவும் குறைந்த திருமண வயது நிர்ணயிக்கப்பட்டிருப்பதைத் தமக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆயினும் இது மேற்கத்தைய தேசத்தின், சர்வதேச சிறுவர் உரிமையை மீறுகின்ற செயலாகும் என்பதை புறந்தள்ளியுள்ள இவர்கள், முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அல்ஜீரியா, ஜோர்டான், மொரோக்கோ, துனீஷியா, துருக்கி, லெபனான் போன்ற நாடுகள், சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாக முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை நிர்ணயித்திருப்பதைக் கவனத்திற் கொள்வதில்லை என சுட்டிக்காட்டியிருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்தில் அனைவருமே இளவயது திருமணத்தைப் பின்பற்றுபவர்களல்ல. ஆயினும் இந்த விடயம்ட தங்களுடைய சமூகத்தில் பிரச்சினைக்குரிய நிலைமையை தோற்றுவித்திருப்பதை முஸ்லிம் அறிஞர்களும் முக்கியஸ்தர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
அதேவேளை, இது முஸ்லிம் சமூகத்தின் சமயம் மற்றும் கலாசரத்துடன் சம்பந்தப்பட்ட விடயம், எனவே அது குறித்து வெளியார் எவரும் மனித உரிமைகள், பெண்ணுரிமை என்று எந்த வடிவத்திலும் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. இது எங்களுடைய சொந்த விடயம் நாங்களே இதைப் பார்த்துக் கொள்வோம் என்று வாதிடுபவர்களும் இருக்கின்றார்கள்.
ஆனால், இந்த விடயம் பகிரங்க விவாதத்திற்கு உள்ளாகும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதுவும் அதுபற்றிய தகவல்கள் பகிரங்கமாக வெளிவந்திருப்பதும் அவர்கள் குறிப்பிடுவதைப் போன்று வெளியார் இது விடயத்தில் ஆர்வம் காட்டவேண்டிய நிலைமையை உருவாக்கியிருக்கின்றன.
புத்தளம் பகுதியில் இடம் பெற்ற சம்பவம் ஒன்றில் 25 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர் இளைஞன் ஒருவனுடன் தனிமையில் இருந்ததைக் கண்டு, அவர் பாலியல் குற்றம் புரிந்தார் என குற்றம் சாட்டி, ஷரியா சட்டத்தின் கீழ் அவருக்கு நூறு கசையடிகள் வழங்கியதாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களை புத்தளம் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
திருணம் செய்தவர்கள் வெளியாருடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்தால் மரண தண்டனை என்றும் திருமணமாகாதவர்கள் இவ்வாறு குற்றம் புரிந்தால் அவர்கள் கசையடி தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதும் ஷரியா சட்ட விதிகள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இத்தகைய ஒரு சூழலில்தான் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தை உள்ளடக்கிய முஸ்லிம் தனியார் சட்டம் பகிரங்க விவாதப் பொருளாகியிருக்கின்றது.
தனியார் சட்டத்தை உறுதிப்படுத்தியுள்ள அரசியலமைப்பின் 16 (1) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் மட்டுமல்ல. தமிழ் மக்களுக்கான தேசவழமைச் சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
முஸ்லிம் பெண்களைப் போலவே தேச வழமைச் சட்டத்திலும் பெண்கள் காணி உரிமை விடயத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பரம்பரை உரித்து வழியாகவோ அல்லது சீதன நடைமுறை வழியாகவோ கிடைக்கின்ற காணி உரிமையானது ஆண்களின் ஆதிக்கத்திலேயே இருக்கின்றது. அதற்கான சட்ட அங்கீகாரத்தை தேசவழமைச் சட்டம் வழங்கியிருக்கின்றது.
கணவன் இல்லாத நேரத்தில் குறிப்பாக கணவன் இறந்துவிட்டால், இன்றைய சூழலில் கணவன் சிறைச்சாலையில் விடுதலையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அல்லது ஏதேனும் குற்றச் செயலுக்காக நீண்டகாலச் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால், அல்லது வெளிநாடொன்றில் சொந்த நாட்டிற்குத் திரும்பி வரமுடியாத சூழலில் சிக்கியிருந்தால், ஒரு பெண் தனது கணவனின் காணியை விற்கவோ கைமாற்றம் செய்யவோ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இதனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பல விதவைகளும் கணவன் குடும்பத்துடன் இல்லாமல் தனித்து குடும்பச் சுமையை ஏற்றுள்ள பெண்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.
எனவே, இந்த விடயத்தில், புதிய அரசியலமைப்பின் ஊடாக மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும். அந்த மாற்றத்தின் ஊடாகத்தான் அவர்களுடைய கஸ்டங்களையும் துன்பங்களையும் போக்க முடியும் அவர்கள் கௌரவமாக சம உரிமையுடைய பிரஜைகளாக வாழவும் முடியும்.