இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் என்ற அடையாளத்துடன் ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்கான பல தசாப்தகால போராட்டத்தின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்து – கத்தோலிக்க வேறுபாடு ஏற்பட்டது கிடையாது.
எமது உரிமைகளுக்கான பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களில் கத்தோலிக்க மக்களும் கத்தோலிக்க மத குருமார்களும் மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள்.
எந்த ஒரு காரணத்தையும் முன்னிட்டு தமிழ் மக்கள் மத்தியில் இந்து – கத்தோலிக்க அடிப்படையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எவரது தூண்டுதல்களுக்கும் ஆளாகி எந்த ஒரு முரண்பாட்டு நடவடிக்கைகளிலும் தயவு செய்து ஈடுபட வேண்டாம்” என அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.