அலர்ஜி என்பது சருமத்தில்தான் வரும் என்றில்லை. கண்களிலும் வரலாம். கண்களில் ஏற்படுகிற பல பிரச்னைகளும் ஒவ்வாமையின் அறிகுறிகள் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கண்களில் ஏற்படும் பருவ கால ஒவ்வாமைகள் மிகவும் சகஜமானவை. ஏற்கனவே அலர்ஜி இருப்பவர்கள், உதாரணத்துக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற சுவாச மண்டலம் தொடர்பான அலர்ஜி இருப்பவர்கள், சரும அலர்ஜி உள்ளவர்கள், கொசு கடித்தால் உடம்பெல்லாம் சிவப்பு நிறத் தடிப்பைப் பெறுபவர்கள் போன்றவர்களுக்கு கண்களிலும் அலர்ஜி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாக கண்களில் வரக்கூடிய அலர்ஜிக்கு Allergic Conjunctivitis என்று பெயர். Conjunctiva என்றால் கண்களின் வெள்ளைப் பகுதிக்கு மேல் உள்ள கண்ணாடி போன்ற டிரான்ஸ்ஃபரன்ட் பகுதி. அந்த வெள்ளைப் பகுதிக்குப் பெயர் Sclera. அதற்கு மேல் டிரான்ஸ்ஃபரன்ட் பகுதியான Conjunctiva வில் ஏற்படுகிற அலர்ஜிதான் Conjunctivitis. குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த நிலைக்கு Spring catarrh என்று பெயர். அதாவது, ஸ்பிரிங் சீசன் என சொல்லக்கூடிய வசந்த காலத்தில் ஏற்படுகிற அலர்ஜி இது. இதற்கு Giant Papillary Conjunctivitis என இன்னொரு பெயரும் உண்டு.
கண்களின் மேல் இமைப் பகுதியைத் தூக்கிப் பார்த்தால் பெரிய பெரிய கற்கள் போல அந்த conjunctiva பகுதி வீங்கிப் போயிருக்கும். அதனால் குழந்தைக்கு வெள்ளை நிறத்தில் கயிறு மாதிரி அழுக்கு வந்து கொண்டே இருக்கும். தவிர கண்களைப் போட்டுத் தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். கண்கள் சிவந்து போகும். கண்களின் வெள்ளைப் பகுதியானது மெதுவாக வித்தியாசமான நிறத்துக்கு அதாவது, வெளிர் மஞ்சளாக மாறிவிடும். குழந்தையின் கண்களே பார்ப்பதற்கு வித்தியாசமாகக் காட்சியளிக்கும். பெரும்பாலான பெற்றோரும் இதை சாதாரண அலர்ஜி என மருந்து போட்டு அலட்சியமாக விட்டுவிடுவார்கள். மருத்துவரிடம் அழைத்துச் செல்ல மாட்டார்கள்.
கார்னியா எனப்படுகிற கருவிழியில் ரத்தக் குழாய்கள் கிடையாது. அதை Avascular என்கிறோம். ஆனால், இந்த அலர்ஜி அலட்சியப்படுத்தப்படுகிற பட்சத்தில் கருவிழிகளில் ரத்தக் குழாய்கள் வளர்ந்து கருவிழிகள் வெள்ளையாக மாறி, பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம். கூடவே கிளாக்கோமா எனப்படுகிற கண் அழுத்த நோய் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம். அதாவது, நீண்ட கால ஸ்டீராய்டு மருந்தின் உபயோகத்தாலும் கண் அழுத்த நோய் வரலாம். எனவே, இதை சாதாரண அலர்ஜியாக அலட்சியப்படுத்தக் கூடாது.
குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். அசுத்தமான மண்ணில் விளையாட விடக்கூடாது. கை நகங்களை வெட்டி விட வேண்டும். குழந்தைகள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் கை, கால்களையும் கழுவப் பழக்குவதோடு, கண்களிலும் குளிர்ந்த தண்ணீரை அடித்து சுத்தம் செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும். தூசி, பூவின் மகரந்தம் மற்றும் பூச்சிகள் இந்த மூன்றும்தான் பிரதானமாக அலர்ஜியை ஏற்படுத்துகிற விஷயங்கள். இது தவிர தலையில் பொடுகு இருந்தால் கண்களில் உள்ள இமை முடிகளிலும் பொடுகு வரலாம். அதற்குப் பெயர் Blepharitis. அதாவது, கண் இமையில் ஏற்படுகிற அலர்ஜி.
இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பொடுகின் காரணமாக ஏற்படுவது. இன்னொன்று இமை முடியில் ஏற்படுகிற தொற்றின் காரணமாக வருவது. மிக அரிதாக கண்களில் பேன் கூட வருவதுண்டு. இமை முடிகளில் வருகிற பேன்களைக் கண்டுபிடிப்பதே மிகவும் சிரமம். Slit lamps என்கிற கருவியின் உதவியுடன் பெரிதுபடுத்திப் பார்த்தால்தான் பேன்களின் முட்டைகள் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதற்கான சிகிச்சை ரொம்பவே சவாலானது என்றாலும் சாத்தியமானதுதான். குழந்தைகள் கண்களை அடிக்கடி தேய்த்துக் கொண்டே இருப்பார்கள்.
இமை முடிகளில் வெள்ளை வெள்ளையாகத் தெரியும். படிப்பில் கவனம் இருக்காது. மருத்துவரிடம் காட்டினால் மேலே சொன்ன விஷயங்கள்தான் காரணம் என்பது தெரிய வரும். இவை எல்லாவற்றுக்கும் அந்தரங்க சுத்தமும் சுகாதாரமும் மிக முக்கியம். தலையில் பொடுகு இருந்தால் அதை சரியாக்க பிரத்யேக ஷாம்பு உபயோகித்து சரி செய்ய வேண்டும். கண் இமை முடியையும் பேபி ஷாம்பு உபயோகித்து சுத்தம் செய்ய வேண்டும். கண் மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அலர்ஜியை உண்டாக்கக்கூடிய உணவுகளையும் பிற விஷயங்களையும் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளை டூ வீலரில் கூட்டிச் செல்லும் போது முன் பக்கத்தில் உட்கார வைக்கக்கூடாது. நடுவில் உட்கார வைக்க வேண்டும். ரொம்பவும் குட்டிக் குழந்தை என்றால் தன்னை நோக்கி உட்கார வைத்துக் கொள்ளலாம். குழந்தைக்கு கூலிங் கிளாஸ் போட்டு அழைத்துச் செல்லலாம். பிரச்னை சரியானாலும், மருத்துவர் ஆலோசனைக்கு வரச் சொன்ன தேதியில் போக வேண்டும். சரியாகி விட்டதே என அலட்சியமாக விடக்கூடாது. சில நேரங்களில் இதிலும் நீண்ட காலப் பிரச்னைகள் வரலாம்.அலர்ஜியினால் கருவிழிகூட பாதிக்கப்படலாம். அதை Keratitis என்கிறோம். அடுத்து மிக அரிதாக, அலர்ஜியா, மெட்ராஸ் ஐ பிரச்னையா என்கிற குழப்பம்கூட வரலாம்.
மெட்ராஸ் ஐ என்பதும் ஒருவகையான அலர்ஜிதான். அது அடினோ வைரஸ் என்கிற தொற்றினால் வருவது. சில நேரங்களில் பாக்டீரியாவும் சேர்ந்து தொற்றை உருவாக்கலாம். கண்கள் பாதியோ, முழுவதுமாகவோ வீங்கலாம். கண்களில் இருந்து மஞ்சள் நிறக் கசிவு வரலாம். கண்கள் சிவந்து போகலாம். இப்போது வரும் மெட்ராஸ் கருவிழிகளையும் பாதிக்கிறது. சுய மருத்துவம் கூடாது. மருத்துவரைப் பார்த்து அவர் சொல்கிற நாட்கள் வரை மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தனி சோப், தனி டவல் என அதிகபட்ச சுகாதாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் வரும். குறிப்பாக திடீரென மழை பெய்து, நின்றால் நிறைய பேருக்கு இந்தப் பிரச்சினையைப் பார்க்கலாம்.