2019 ஆம் ஆண்டு பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் இடம்பெறவுள்ளது.
இந்த விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அந்த விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து பாதீடு மூன்றாம் வாசிப்பு எனப்படும் பாதீடு குழுநிலை விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 19 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அந்த விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை , 2019 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய வெகன் ஆர் (Wagon R) சிற்றூர்தியின் விலை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனுடன் அல்ட்டோ (Alto) சிற்றூர்தியின் விலை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் எனவும்,
அதனுடன் அக்ஷியோ (Axio) மற்றும் அக்குவா (Aqua) சிற்றூர்திகள் 6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் எனவும் வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரிமியோ (Premio) மற்றும் சி.எச்.ஆர் (CHR) சிற்றூர்திகளின் விலைகள் 7 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
2019 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்டத்திற்கு அமைய நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் வாகனங்களது உற்பத்தி வரி மற்றும் சொகுசு வாகன வரிகள் அதிகரிக்கப்படுகின்றன.
இதன்படி 800 சீ.சீக்கு குறைவான பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாலும், 1000 சீ.சீக்கு குறைவான பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரி ஒருலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.
அத்துடன் 1300 சீ.சீக்கு குறைவான பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரியானது, 5 லட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.
அதேநேரம், 800 சீ.சீக்கு குறைவான ஹைபிரிட் பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாலும், 1500 சீ.சீக்கு குறைவான ஹைபிரிட் பெற்றோல் வாகனங்களின் உற்பத்தி வரியானது, 5 லட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.