உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களாக தொலைத்துவிட்டு அவர்களுக்காக தெருக்களில் அமர்ந்து நீதிகேட்டுப் போராடிக் கொண்டு இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவித் தொகையாக மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்போவதாக அரசு கூறியிருப்பது அவர்களுக்கு போதுமானதாக இருக்காது ஈ.பிடி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள் நடந்துள்ளன. ஆட்கள் காணாமல் போன விவகாரத்தை வெளியுலகுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் ஈ.பி.டி.பியே முதலில் காணாமல் போனோர் சங்கத்தை 1997ஆம் ஆண்டு ஆரம்பித்தது.
நாம் காணாமல் போனோர் சங்கத்தை ஆரம்பித்தன் நோக்கமானது, அந்தசெய்தியை வெளியுலகுக்கு எடுத்துச் செல்வதற்கு ஊடாக காணாமல் போனவர்களைக் கண்டுபிடுப்பதும், அதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும், பரிகாரத்தையும் பெற்றுக்கொடுப்பதாகவுமே இருந்தது.
ஆனால் கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்ட கதையாக காணாமல் போனோர் விவகாரத்தை இன்று தவறானவர்கள் கையில் எடுத்துக்கொண்டு அதில் தமது சுயலாப அரசியலையும், பிழைப்பையும் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
நுன்கடன்களால் நாளாந்தம் தற்கொலை செய்து கொண்டிருக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலை தூக்கிநிறுத்தவும், வறுமையில் வாழும் மக்களுக்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் எவையுமில்லை.
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வீடுகள் தேவையாக இருக்கின்றது. ஆனால் சிறுபான்மை மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடமேறியதாக கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கமோ கடந்த நான்கு வருடங்களில் எத்தனை சதவீதம் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளது என்ற கேள்விக்கு பூஜ்ஜியமே பதிலாகவுள்ளது.
இதேவேளை 10 இலட்சம் பெறுமதியான 15 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ள அரசாங்கம், புதிதாக திருமணம் முடிப்பவர்களுக்கு ஒரு கோடிரூபாய் வீட்டுக்கடன் வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. அவ்வாறாயின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு குடும்பங்களாக கஸ்டப்படும் குடும்பங்களுக்கான கொடுப்பனவை 10 இலட்சத்திலிருந்து இரண்டுமடங்காக அதிகரித்து வழங்கவேண்டும்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் வரவு 2400 பில்லியனாகவும், துண்டுவிழும் தொகை 2150 பில்லியனாகவும் இருக்கையில் வடக்கில் பலதிட்டங்களை முன்மொழிந்துள்ள அரசின் வாக்குறுதிகள் மீது எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
கிழக்கிலும் யுத்தம் நடந்தது. அங்கேயும் பெண்களைத் தலைமையாகக் கொண்டசுமார் 30 ஆயிரம் குடும்பங்களும்,அங்கவீனர்களும், மாற்றுத்திறனாளிகளும் வறுமையில் வாழ்கின்றார்கள். அங்கும் வேலைவாய்ப்புக்காக ஏங்கும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளும் இருக்கின்றார்கள். அவர்களின் வறுமையைப் போக்கவும், வளமான எதிர்காலத்திற்காகவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்விதமான பரிந்துரைகளும் உள்ளடக்கப்படவில்லை அந்தமக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
சிறுபான்மை மக்களின் வாக்குகளால் ஆட்நிபீடமேறியதாக கூறிய இந்த அரசாங்கமும், அவர்களை ஆட்நிபீடமேற்றியதாகக் கூறிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கடந்த நான்கு ஆண்டுகளாக வரவுசெலவுத் திட்டங்களாக முன்மொழிந்த ஒருதிட்டத்தையாவது இதுவரை நடைமுறைப்படுத்தியிருக்கவில்லை;.
அரசாங்கம் என்னதான் திட்டங்களையும், முன்மொழிவுகளையும் வாக்குறுதிகளாக முன்வைத்தாலும் ஆட்சியை ஏற்படுத்தியதாகவும், ஆட்சியைப் பாதுகாப்பதாகவும் கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே அரசின் பரிந்துரைகள் செயல் வடிவம் பெறுவதற்கான வழிகாட்டலையும், அழுத்தங்களையும் அரசுக்கு கொடுக்கவேண்டும்.
துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்ற அக்கறையோ, ஆற்றலோ இல்லை என்பதாலேயே, தமிழ்மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள் தீராப்பிரச்சனைகளாக தொடர்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.