மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்க கோரியும், மோசடியாளர்களை தண்டிக்க் கோரியும் நேற்று, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது. இந்த போராட்டத்தில், செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக பல ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்த பொதுமகன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் விசாரணையின் பின்னர் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, ஏழு நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதேச செயலாளர் சு.வில்வரெட்ணம் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைதாகியுள்ளார்.
அதேவேளையில் நேற்று நடந்த போராட்டம்த்தின் போது மாவட்டச் செயலாளர் மா. உதயகுமாரிடம் கையளித்த மகஜருக்கு அமைய, குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செங்கலடி பிரதேச செயலகத்தில் நேற்று காலை 11 மணி தொடக்கம் இன்று வரை மாவட்ட உள்ளக கணக்காய்வு அதிகாரி திருமதி இந்திரா மோகன் இந்த விசாரணைகளை நடத்தி வருகிறார்.
குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நபர்களினால் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை உள்ளடக்கிய ஆவணங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் விசாரணை அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளை ஏற்கனவே கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.