இளம் வயதில் எனது மூன்று பிள்ளைகளும் பெண்களுடன் பழகுவது சாதாரண விடயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் ஆண்களுக்கு பெண் தோழிகள் இருப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் சமகால அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரையின் போது நாமலுடன், நடிகைகள் தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஷிரந்தி, குறித்த நடிகைகளை தொலைபேசி ஊடாக எச்சரித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த விடயம் குறித்து ஊடகம் எழுப்பிய கேள்விக்கு ஷிரந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நான் என்றும் யாரையும் திட்டியதில்லை. வேண்டுமானால் எனது பிள்ளைகளை கேட்டுப் பாருங்கள். இந்த வயதில் பெண் பிள்ளைகள் நண்பர்களாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு பெண்கள் நண்பர்களாக இருக்க வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் நண்பர்களாக இருக்க வேண்டும். எங்களுக்கு அது குறித்து தெரியும்.
எனது பிள்ளைகள் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் தீர்மானிக்க மாட்டேன். பெண்கள் வீட்டிற்கு வந்தாலும் நான் சிறந்த முறையில் வரவேற்பேன். மூன்று பிள்ளைகளும் யாரை திருமணம் செய்கின்றார்கள் என்பது தொடர்பில் என்னிடம் இன்னமும் கூறவில்லை.
நான் என்றுமே பலவந்தப்படுத்த மாட்டேன். அவர்கள் புத்திசாலி பிள்ளைகள். நான் என் பிள்ளைகள் மீது கைகளை நீட்டியதில்லை.
என்னை போன்றே எனது கணவரும் பிள்ளைகளை திறந்த மனதுடன் பார்க்கின்றார். வேண்டியவர்களை திருமணம் செய்துக் கொள்ளுமாறே அவரும் கூறுகின்றார் என ஷிரந்தி ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.