கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அடுத்த 3 மாதங்களுக்குள் பிசிசிஐ அமைப்பின் ஒழுங்கு முறைக்குழு ஸ்ரீசாந்த் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கப்பட்டது அவருக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஸ்ரீசாந்த் அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்க கூறி டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, இந்த 3 வீரர்களுக்கும் வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ ஒழுங்கு முறைக்குழு உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லை எனக் கூறி விடுவித்தது. தன்னுடைய கருத்தையும், விசாரணையை அறிக்கையையும் கேட்காமல், பிசிசிஐ தடை விதித்துவிட்டது என்று ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டினார்.
இந்தத் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கேரள உயர் நீதிமன்றத்தின் ஒருநீதிபதி அமர்வு, ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் அமர்வில் பிசிசிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஸ்ரீசாந்த் மீதான தடையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தன் மீதான வாழ்நாள் தடையை நீக்கக் கோரியும், ஸ்பாட் பிக்ஸிங்கில் தான் ஈடுபடவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதில் ஸ்ரீசாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் ஆஜராகி வாதாடினார். விசாரணையின்போது, தன்னை சூதாட்ட தரகர் அணுகியதாகவும், ஆனால், பிடிவாதமாக ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் ஸ்ரீசாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அதற்குரிய ஆதாரங்களாக தொலைபேசி உரையாடலையும் கடந்த ஜனவரி 30-ம் தேதி விசாரணையின் போது தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், இன்று நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம். ஜோஸப் தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பில், “ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி பிசிசிஐ அமைப்புக்கு உத்தரவிடுகிறோம். அடுத்த 3 மாத காலத்துக்குள் ஸ்ரீ சாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து மறுபரிசீலனை செய்ய, வேறு ஒரு புதிய முடிவோடு பிசிசிஐ அமைப்பு நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிடுகிறோம். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு முறையிட ஸ்ரீசாந்துக்கு உரிமை இருக்கிறது.
அதேசமயம், ஸ்ரீசாந்த் தனக்கு எந்தவிதமான தண்டனையும் அளிக்கக் கூடாது எனும் மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஸ்ரீசாந்த் மீதான வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸார் தொடர்ந்துள்ள மேல்முறையீடு தொடரும். அந்த கிரிமினல் விசாரணைக்கும், இந்த தீர்ப்புக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவித்தனர்.