புதிய ரூ.500 நோட்டுக்கள் 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் சென்னை வந்துள்ளன.
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றித்தருவதற்காக ரிசர்வ் வங்கி தனது அனைத்து அலுவலகங்களுக்கும் புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை அனுப்பியது.
தமிழகத்துக்கு 270 பெட்டிகளில் பெட்டிக்கு ரூ.20 கோடி வீதம் ரூ.5 ஆயிரத்து 400 கோடி அனுப்பப்பட்டது. இந்த பணம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் வராமல் இருந்தது. இதனால் பணத்தட்டுப்பாடு மற்றும் சில்லரை தட்டுப்பாடு கடுமையாக நிலவியது.
கர்நாடக மாநிலம் மைசூர், மராட்டிய மாநிலம் நாசிக் ஆகிய இடங்களில் ரிசர்வ் வங்கி சார்பில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. நாசிக்கில் உள்ள அச்சகத்தில் இருந்து முதல்கட்டமாக 50 லட்சம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகத்தில் இருந்து 2 கன்டெய்னர் லாரிகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு நேற்று பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. இதனை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்றனர்.
இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு வினியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.