அலுவலகத்தில் பலர் வேலைபார்ப்பார்கள். ஒருவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். பலரும் அவரிடம் வாழ்த்து தெரிவிப்பார்கள். அதில் சிலரது மனதில் எதிர்மறையான கேள்விகளும், பொறாமையும்தான் குடியிருக்கும். மலர்ந்த முகத்தோடு இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் உள்ளே, ‘நாமெல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறோம்.
இவருக்கு மட்டும்தான் சம்பளம் கூடுகிறது’ என்று பொறுமுவார்கள். சிலர், ‘இவருக்கு பதவி உயர்வு கிடைக்க என்ன காரணம்?’ என்று குறுக்குவழியில் கேள்விகள் கேட்டு, ஏளனமாகப் பேசுவார்கள். பதவி உயர்வு ஒருவேளை பெண்ணுக்கு கிடைத்திருந்தால், பொறாமைத் தீ வேறு மாதிரி பற்றி எரியும்.
ஒருவருக்கு ‘டீம் லீடர்’ என்ற பதவி உயர்வு கிடைத்தது. உடனே அவரது நண்பர் ஒருவர் நெருங்கிவந்தார். ‘நீ டீம் லீடர் ஆனதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் நீ வழிநடத்தப் போவது மட்டமான டீம். இதற்கு முன்னால் இருந்த டீம் லீடர் இவர்களை மேய்க்க முடியாமல் வேலையைவிட்டே ஓடிவிட்டார். இப்போது நீ வந்திருக்கே. எவ்வளவு நாட்கள் ஓடுதுன்னு பார்ப்போம்’ என்றார்.
இவரது பேச்சிலும், மூச்சிலும் பொறாமையும், எரிச்சலும் இருப்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இப்படிப்பட்டவர்களை பகைத்துக்கொள்ளவேண்டியதில்லை. ‘நீங்கள் என்னை உஷார் படுத்தியதற்கு நன்றி’ என்று கூறிவிட்டு, உங்கள் வேலையில் கவனமாக இருப்பதுபோல், இந்த நண்பர் மீதும் கண்ணும், கருத்துமாய் இருங்கள். உங்களை எங்கேயாவது கவிழ்த்துவிட்டுவிட்டு, ‘நான் அப்பவே சொன்னேன்! நான் சொன்னதுபோலவே ஆகிவிட்டது பார்த்தாயா?’ என்பார்.