தெலுங்கு சினிமா உலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மிகவும் வறுமையில் இருக்கும் கிராமங்களை தத்தெடுத்து தங்களது சொந்த செலவில் அந்த ஊரில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சுத்தப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகில் உள்ள கம்மடனம் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் அவதிப்பட்டு வந்ததை அறிந்து, அந்த கிராமத்தை தத்தெடுத்து பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதையடுத்து அந்த கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஏற்பாடு செய்தார். குழாய் கிணறு அமைத்து மின்சார மோட்டாரையும் பொருத்தினார். இதனால் அந்த கிராம மக்களுக்குந நீண்ட காலமாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்தது.
இந்நிலையில் பிரகாஷ் ராஜ் மேலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார். சித்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டரெட்டிபள்ளி என்ற கிராமத்தை தத்தெடுத்து, அங்கு பாழடைந்து கிடந்த பள்ளிக்கூடத்தை சரிசெய்ய முடிவு செய்துள்ளார். நேற்று தனது குடும்பத்துடன் அங்கு சென்ற பிரகாஷ் ராஜ், விவசாயம் மற்றும் பள்ளிக்கூடம் கட்டும் பணியையும் மேற்பார்வை செய்தார்.