வளசரவாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் லட்சுமி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அனந்தபத்மநாபன் (வயது58). சாப்ட்வேர் என்ஜினீயர்.
இவர் கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் 16-ந் தேதி மாலை சென்னை திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
தியாகராய நகர் துணை கமிஷனர் அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணண் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை தேடி வந்த நிலையில் மதுரவாயல் அருகே நேற்று இரவு இலங்கையைச் சேர்ந்த சிவராஜன் (43), அவனது கூட்டாளி தருண் (31) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 87 பவுன் தங்க நகைகள், கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிவராஜன் கடந்த 1989ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்து மதுரை ஆனையூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி அங்கு பல்வேறு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயல் சக்கரபாணி நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி மீன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் மதுரவாயல், வளசரவாக்கம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சிவராஜன் மீது ஏற்கனவே மதுரை கூடல்நகர் பகுதியில் 6 கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற போது கடலோர காவல்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.