ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக மூன்று முறை சம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, தீவிரமாக தயாராகி வருகின்றது.
இதற்கிடையில், ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பயிற்சிகளில் ஈடுபடும் காணொளியினை தற்போது பார்க்கலாம்,
எதிர்வரும் 24ஆம் திகதி மும்மை இந்தியன்ஸ் அணி டெல்லி கெப்பிடல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதற்கிடையில் அந்த அணியின் தலைவர் ரோஹித் சர்மா, நடப்பு தொடரின் அனைத்து போட்டிகளிலும் தானே ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறிய கருத்துக்கள் இவை,
“இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் அனைத்து போட்டிகளிலும் நான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்க முடிவு செய்துள்ளேன். அதில் மிக உறுதியாக உள்ளேன். உலகக் கிண்ண தொடர் நெருங்கி விட்டது என்பதுடன், இந்திய அணியிலும் ஆரம்ப வீரராகவே விளையாடி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
முன் வரிசை வீரராக விளையாடும்போது தான் அதிக ஓட்டங்கள் குவித்திருக்கிறேன் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அணி நிர்வாகமும் இதை நன்கு உணர்ந்துள்ளது. நடு வரிசையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது, இந்த முடிவை எளிதாக்கிவிட்டது.
இந்திய அணி வீரர்கள் உலகக்கிண்ண தொடர் வரை தொடர்ச்சியாக அடுத்த சில மாதங்களுக்கு சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது உண்மையிலேயே சவாலானது தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்த தொடர்களில் விளையாடிய அனுபவம் உள்ளதால், இதை எளிதாக சமாளிக்க முடியும் என நம்புகிறேன்.
உடல்தகுதியை பராமரிப்பது மற்றும் பணிச்சுமையை கையாள்வது என்பது ஒவ்வொரு வீரருக்கும் வேறுபடும். ஓய்வு தேவைப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட வீரர் தான் முடிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.