இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், இன்னமும் இரண்டு நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், இத்தொடரில் விளையாடும் அணிகளில் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சில வீரர்கள் உபாதைக்காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளனர்.
இதில் குறிப்பாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தென்னாபிரிக்க வீரரான லுங்கி இங்கிடி, இலங்கை அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியின் போது உபாதைக்குள்ளானார். ஆகையால் அவரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் சகலதுறை வீரரான சகிப் ஹல் ஹசன், உபாதையிலிருந்து அவதிப்பட்டு வருவதால், அவர் இத்தொடரில் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
பங்களாதேஷ் வீரரான சகிப் ஹல் ஹசன், தற்போது விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருக்கின்றார்.
இதற்கிடையில், அவரது காயம் குணமடைந்து, உடற்தகுதியை நிரூபித்த பின்னரே அவர் அணியில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குள் புதிதாக உள்வாங்கப்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளரான என்ரிச் நோர்ட்ஜே உபாதைக் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.
தென்னாபிரிக்க வீரரான என்ரிச் நோர்ட்ஜே, இலங்கை அணிக்கெதிரான தொடரில் தோள் பட்டையில் உபாதைக்குள்ளாகியுள்ளதால், இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்களான ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்தனர்.
அவர்களுக்கு ரஞ்சி கிண்ண தொடரில், சிறப்பாக பந்து வீசிய கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இத்தொடர் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 17 போட்டிகள், 8 நகரங்களில் நடைபெறுகின்றன.
இத்தொடரின் முதல் போட்டியில், நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 ஐ.பி.எல். தொடர்களில் ராஜஸ்தான் ரோயல்ஸ், டேக்கன் சார்ஜஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இரண்டு முறைகளும் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா மூன்று முறைகளும், சம்பியன் கிண்ணங்களை ஏந்தியுள்ளன.