பெங்களூர்: சொகுசு ஹோட்டலில் நான் பாஜக தலைவருடன் தங்கியிருந்ததற்கு ஆதாரம் இருக்கிறதா என்று நடிகை பூஜா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல நடிகை பூஜா காந்தி பெங்களூரில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கிவிட்டு ரூ. 4.5 லட்சம் பில் கட்டாமல் நைசாக நழுவிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பூஜா பாஜக தலைவர் அனில் மெனசினகயியுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்து பூஜா காந்தி கோபம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
தயாரிப்பாளர்
ஒரு படத்தை எடுக்கும்போது பிற இடங்களில் இருந்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைக்க வேண்டி இருக்கும். ஒரு படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் நான் அவர்களை ஹோட்டலில் தங்க வைத்தேன். அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டேன்.
பில்
நான் பில் கட்டாமல் எஸ்கேப் ஆகிவிட்டதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஹோட்டல் மேனேஜரிடம் பேசியதற்கு ஏதோ தவறான புரிதலால் இப்படி ஆகிவிட்டது என்றார். நான் பாஜக தலைவர் அனில் மெனசினகயியுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாக கூறுகிறார்கள்.
அனில்
நானும் அனிலும் ஹோட்டலில் தங்கியதை நிரூபிக்க முடியுமா?. அதற்கு ஆதாரம் உள்ளதா? நான் அவருடன் தங்கியதை பார்த்தார்களா, இல்லை ஹோட்டல் பதிவேட்டில் எங்கள் பெயர்கள் இருப்பதை பார்த்தார்களா? அனில் எனக்கு சகோதரர் போன்றவர். பில் கட்டவில்லை என்பது தான் புகார்.
டிவி சேனல்கள்
சில டிவி சேனல்களோ பில் பிரச்சனையை விட்டுவிட்டு நான் அனிலுடன் அந்த ஹோட்டலில் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருந்ததாக கூறுகிறார்கள். நான் ஒரு பெண் என்பது நினைவில் இருக்கட்டும். அனிலுக்கு குடும்பம் உள்ளது. இப்படிப்பட்ட செய்திகளால் மக்கள் மத்தியில் எங்களை பற்றி தவறான எண்ணம் ஏற்படும் என்கிறார் பூஜா காந்தி.
ரூ. 4.5 லட்சம்
பூஜா காந்தி ஹோட்டல் பில் தொகையில் ரூ. 22 லட்சம் அளவுக்கு பணம் கட்டினார். ஆனால் மீதமுள்ள ரூ. 4.5 லட்சத்தை செலுத்தாமல் எஸ்கேப் ஆகிவிட்டார் என்று ஹோட்டல் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.