வவுனியாவில் வியாபார நிலையங்கள் பல அனுமதி இன்றி செயல்படுவதால் மதுபானசாலைக்கு மட்டும் நடவடிக்கை எடுக்கமுடியாதென நகரசபை செயலாளர் இ. தயாபரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வவுனியா புதியபேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கபட்டுள்ள மதுபாணநிலையத்தை அகற்றமுடியாமை தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ளார் குறித்த வட்டாரத்தின் நகரசபை உறுப்பினர் த.பரதலிங்கம்.
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நேற்றுகாலை நடைபெற்றது. இதன்போதே சபைஉறுப்பினர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவித்த அவர் மதுபான நிலையத்தை அகற்றவேண்டும் என இந்த சபையிலே நாங்கள் எடுத்ததீர்மானத்தை அமுல்படுத்த முடியாததை எண்ணி கவலையடைகின்றேன். இந்த உயரியசபையில் நாங்கள் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாதுவிடின் நாம் இங்கு இருப்பதில் பலன் இல்லை. எனவே இதற்கு சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.
எனினும் வவுனியா நகரில் பல கடைகள் சபையின் வியாபார அனுமதிபத்திரம் இன்றி இயங்குவதாகவும் அப்படியானால் அனைத்திற்கும் சட்டநடவடிக்கை ஏடுக்கவேண்டும் என செயலாளர் விளக்கமளித்திருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் பரதலிங்கம் அனுமதி பத்திரங்கள் இல்லாத மக்கள் நலன்சார்ந்த வியாபார நிலையங்களை விலக்களித்துவிட்டு மக்களிற்கு பாதகமான இவ்வாறான மதுபான நிலையங்களிற்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கமுடியும் என தெரிவித்திருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட தலைவர் எமது சபையினால் எடுக்கபட்ட தீர்மானத்தை மது வரி திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கும், ஆளுநருக்கும் அனுப்பிவைப்பதாக தெரிவித்திருந்தார்.