பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தினதேரர் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ‘நஞ்சுத்தன்மையற்ற சந்தை” எனும் தொனிப் பொருளில் மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் முதலாம் திகதிகளில் கண்காட்சியொன்று இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வானது பௌத்த சம்மேளனம் மற்றும் பெண்கள் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகவியளாலர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது இரத்தின தேரர் இலங்கையை ஒரு நோயாளி எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது நாட்டிலே யுத்தத்தின் போது இறந்ததை விட தற்போது நோய்களினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் தொகை அதிகரித்துள்ளது. இதனாலேயே இலங்கையை ஒரு நோயாளி எனக்குறிப்பிட்டேன். இன்று மக்கள் அதிகளவில் புற்று நோயால் பாதிப்படைந்தவர்களாக காணப்படுகின்றார்கள். இதற்கான முக்கிய காரணம் எமது நாட்டில் அதிகரித்து வரும் இரசாயனப் பாவனையே.
நாடுபூராகவும் இன்று இராசாயன பதார்தங்களின் பாவனையின்றி பெருவாரியான விவசாய செய்கைகள் மேற்கொளப்படுகின்ற போதிலும் அரசாங்கம் இது தொடர்பில் அக்கறையின்றி உள்ளது. இந்த விவசாயிகள் அரசாங்கத்திற்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதுடன், அரசாங்கத்திடம் எமக்கு வழங்கப்படும் இரசாயனப் பசளைகள் தேவையில்லை.
அதற்கான பணத்தை மட்டும் பெற்றுத்தாருங்கள், நாங்கள் இரசாயனமற்ற இயற்கையான பசளைகளை உபயோகித்து விவசாயத்தை மேற்கொள்கின்றோம் என தெரிவித்துள்ள போதிலும் அரசாங்ம் இதுவரையும் அது தொடர்பில் கவனம் செலுத்தாமலிருக்கின்றது.
இதேவேளை கிளைபோசெட் இரசாயனப் பசளை அமெரிக்காவின் தயாரிப்பாக உள்ள போதிலும், அமெரிக்கா இதனை தடைசெய்துள்ளது. ஆனால் எமது நாட்டில் இன்றும் பெருந்தோட்டத் துறையில் இந்த பசளை பயன்படுத்தப்படுகின்றது.
இதனை பயன்படுத்த அனுமதி வழங்கிய நபர்கள் குறித்து நாங்கள் அவதானமாகவே இருக்கின்றோம். எதிர் வரும் காலங்களில் இவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எண்ணியுள்ளோம்.
எமது நோக்கம் நச்சுத்தன்மையற்ற நாட்டை உருவாக்குவதே. நாங்கள் இதுதொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதுடன் .எதிர்காலத்தில் வரவிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்வோம் எமது வேண்டுகோளுக்கு இணங்கும் வேட்பாளரை மாத்திரமே நாங்கள் ஆதரிப்போம். இது எமது நாட்டின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு மேற்கொள்ளவுள்ள விடயமாகும். நாட்டில் அனைவரும் இதற்கு ஆதரவு வழங்கவேண்டும்.
இந்நிகழ்விலே வணபிதா சாந்த பிரான்சிஸ், பெண்கள் அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர் நந்தசிறி கமகே மற்றும் பெண்கள் கடனுதவி வங்கி செயலாளர் சுதர்ஷினி குமுதினி ஆகியோரும் இணைந்துக் கொண்டிருந்தனர்.