சிம்பு நடிப்பில் பல்வேறு தடைகளுக்கு பிறகு வெளிவந்திருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மஞ்சிமா மோகன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிம்பு, இன்று சென்னையில் ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில் இப்படத்தை பார்த்துள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு சிம்பு பேசும்போது, ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று காத்திருந்தேன். தற்போது அவர்களுடன் சேர்ந்து பார்த்தது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இந்த நேரத்தில் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு தந்த கவுதம் மேனனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது நாட்டில் நிலவும் பணப்பிரச்சினைகளையும் மீறி படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்த வெற்றிக்கு காரணம் நிச்சயமாக நாங்கள் இல்லை. ரசிகர்கள்தான் காரணம். இந்த வெற்றி என்னுடையது கிடையாது. இது மக்களுடைய வெற்றி. இந்த தருணத்திலும் அனைவரும் வந்து படம் பார்ப்பது மனதை உருக்கிவிட்டது. ஏ.ஆர்.ரகுமான் சார் என்னுடைய படம் என்பதையும் தாண்டி, இந்த படத்தில் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சதீஷுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு இருந்தது.
கிளைமாக்ஸை பார்க்கும்போது, எப்படி இருக்கப்போகிறது என்று எனக்கே பயமாக இருந்தது. அதை பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பார்க்காதவர்கள் தியேட்டரில் சென்று பார்த்தால் தெரியும். இந்த நேரத்தில் இறைவனுக்குத்தான் எல்லா நன்றிகளையும் சொல்லவேண்டும். அவர் இல்லையென்றால் நாமெல்லாம் இல்லை. சிறப்பு என்று சொல்லி முடித்தார்.
சிம்புவுடன் அவர் தற்போது நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் சக நடிகர் மஹத் மற்றும் சிம்புவின் நண்பர் ஒருவரும் உடன் சென்றனர்.