பெரியவர்களைப் பார்த்தால் காலில் விழுவது, கோயிலில் விழுந்து கும்பிடுவது, யோகிகளைப் பார்த்தால் உடனே பாதத்தை தொட்டு நமஸ்கரிப்பது போன்ற வழக்கங்கள் கலாங்கலமாக இருந்து வருகின்றது. அறிவியல் ரீதியாக இதில் ஏதாவது அடிப்படை உள்ளதா?
காலைத் தொட்டு வணங்குவது நம்முடைய கலாசாரமாக மட்டுமல்ல, இதில் அறிவியல் ரீதியான சில காரணங்களும் உண்டு. கலாசாரம் என்று பார்த்தால் மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம்.
பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே முழு மூல காரணமாக இருந்தவர்கள் அவர்கள் தான் என்பதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பாதத்தை தொட்டு வணங்குகிறோம்.
அறிவியல் ரீதியாக உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று உறுப்புகளாகப் பார்க்கலாம். உடல் என்பது நம்மை ஆட்டுவிக்கும் ஒரு சக்தி. இந்தச் சக்திதான் நம்மை எல்லாவிதத்திலும் செயல்பட வைக்கிறது.
நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் இருக்கிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்து இருக்கிறார்கள்.
அதை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் காலில் விழும் பழக்கம். ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுவதற்கான வழிமுறைகள் உண்டு.
அதை அறிந்து அவர்களின் பாதத்தை பற்றினால், அவர்களிடம் இருக்கும் சக்தியை நாம் பெறமுடியும். யோகிகள் சிலர் பாதத்தைப் பற்றுவதற்கு அனுமதிப்பதில்லை.
மேலும், கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு. நீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் கடவுள் சக்தி ரூபமாக விளங்குகிறார். அங்கிருக்கும் சக்தியை பெற்றுக்கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை.
அவ்வாறு, ஏற்கும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும் என்றால் கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
ஆண்கள் என்றால் தங்கள் உடல் தரையில் படும்படியாகவும், பெண்கள் என்றால் 5 உறுப்புகள் படும்படியாகவும் தரையில் விழுந்து வணங்க வேண்டும். இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது யோகாசனத்தில் முக்கிய நிலையாகும். சூரிய நமஸ்காரத்தில் இது மிக முக்கிய நிலையாகும்.
நாம் இந்த யோகாசனத்தை அனுதினமும் வழக்கத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தரையில் விழுந்து வணங்குவதை நம்முடைய கலாசாரமாக கொண்டுள்ளோம்.
ஆனால், இப்போது உள்ள இளம் தலைமுறையினர் பெரியோர்களின் காலில் விழுவதை அவமானமாகக் கருதுகின்றனர். காலில் விழுவது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அறிவியல் ரீதியாக இதில் உள்ள உண்மைகளையும், நன்மைகளையும் நாம் கட்டாயம் உணர வேண்டும்.