யாழ். கொழும்புத் துறை வீதியில் சுண்டி சந்தியில் இருந்து பெஸ்டியன் சந்திப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்களில் சென்ற நபர், முன்னே சென்ற முச்சக்கர வண்டியை முந்தி செல்ல முயற்சித்த போது, எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தை அடுத்து முச்சக்கர வண்டி சாரதியும், எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.நல்லூர், யமுனா வீதியை சேர்ந்த 76 வயதான பேதுரு அன்டனி என்ற நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டியவரை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை யாழ் – ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை 5.20 அளவில் நடந்த விபத்தில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கி சென்ற டிப்பர் வண்டி, எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
4ஆம் பிரிவு வேலணை கிழக்கு, வேலணை என்ற முகவரியை சேர்ந்த 21 வயதான நாகராஜா சுதர்சன் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.