உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்
பதிலளிக்கிறார்
கு.நக்கீரன்
உளவள ஆலோசகர்
பெயர் குறிப்பிட விரும்பவில்லை
வவுனியா
கேள்வி: நான் 25 வயதுப் பெண். திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றது. பேச்சுத் திருமணம்தான். எனது கணவர் நல்ல வேலையில் இருக்கின்றார். அதனால் பொருளாதாரரீதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனக்கு இருக்கும் ஒரே பிரச்சினை என்னவென்றால் எனது கணவர் என்னுடன் நெருங்கிப் பேசுவதில்லை. என்னை மகிழ்ச்சிப்படுத்தவோ, என்னைப் பாராட்டவோ, என்னிடம் எதையும் பகிர்ந்து கொள்வதோ இல்லை. நான் அவரை மிகவும் காதலிக்கின்றேன். ஆனால் அவர் தனது அன்பை ஒரு போதும் வெளிப்படுத்தியதே இல்லை. இவரை எப்படி என் வசம் கொண்டு வருவது?
பதில்: சகோதரி! நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினை பற்றி ஒரு தெளிவான நிலைப்பாட்டுக்கு வர முடியாமல் உள்ளது. இருப்பினும் உங்களால் தரப்பட்ட தரவுகளை வைத்துப் பார்க்கையில் உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இடையில் உண்மையான கணவன் மனைவி உறவு இல்லை என்றே தெரிகின்றது.
உங்கள் திருமணம் பேச்சுத் திருமணம் என்று கூறியுள்ளீர்கள். பல பேச்சுத் திருமணங்களில் பேச வேண்டிய விடயங்கள் பேசப்படுவதில்லை. சமூக அந்தஸ்தும், சீதன கணக்கு வழக்குமே பேசப்படுகின்றது. பொதுவாக ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ள ஆண்கள் சில வேளைகளில் இவ்வாறு நடந்து கொள்வதும் உண்டு. அதாவது அவர்கள் உங்களுக்கு உதவியும் செய்யமாட்டார்கள், உபத்திரவமும் தர மாட்டார்கள். தாமுண்டு தம் நண்பர்களுண்டு என்று தம் வழியே போய்க்கொண்டு இருப்பார்கள்.
இன்னும் சிலர் மனைவியையும் அனுசரித்துக் கொண்டு தம் ஆண் நண்பர்களுடனும் மகிழ்வாக இருப்பார்கள். இன்னும் சிலர் காலப்போக்கில் ஆண் நண்பர்களின் தொடர்புகளை விட்டு மனைவி, குடும்பம் என்று கட்டுக்குள் வந்து விடுவார்கள். உங்கள் கணவர் சிலவேளைகளில் முதலாம் வகையாக இருக்கலாம். மற்றபடி உங்கள் கணவர் உங்களை மகிழ்ச்சிப்படுத்தாமல் இருப்பதற்கு உங்களின் தரவுகளின் அடிப்படையில் வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. எதற்கும் நீங்கள் தகுந்த ஓர் உளவள ஆலோசகரை நேரில் சந்தித்துப் பேசுவது நல்லது.
எஸ்.சிவாஸ்கரன்
திருநெல்வேலி
கேள்வி: நான் 24 வயது ஆண். நல்ல வேலையில் உள்ளேன். ஆறு மாதமாக ஒரு பெண்ணைக் காதலித்து வருகின்றேன். இப்போது நமது விடயம் இரு வீட்டாருக்கும் தெரிந்து அவர்கள் சம்மதம் சொன்னாலும் பெண் வீட்டில் உடனேயே திருமணம் செய்யச் சொல்கின்றனர். என்னால் அது முடியாது. காரணம் எனக்கு இரு தங்கைகள் உள்ளனர். அவர்களைக் கரை சேர்த்த பின்பே நான் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். ஆனால் எனது காதலியும், அவள் வீட்டாரும் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்துகின்றனர். காதலா கடமையா என்று குழம்புகின்றேன். நான் என்ன செய்வது?
பதில்: சகோதரா! பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பஞ்சு பற்றி விடும் என்ற பயமே உமது காதலிக்கும் அவரின் வீட்டாருக்கும். இன்று எமது பிரதேசத்தில் பல பஞ்சுகள் பிஞ்சிலேயே எதுவித சட்ட ஒழுங்கும் இல்லாமல் பற்றிக் கொண்டு பொலிஸ் நிலையத்திலும், நீதிமன்றிலும் நிற்கின்றார்கள். இந்த சமூகப் பின்புலம் காரணமாக அவர்களின் பயம் நியாயமானதே. எனவே நீங்கள் ஒரு பண்பான, சட்டம் ஒழுங்குக்குக் கட்டுப்பட்ட இளைஞன் என்பதை பெண் வீடடாருக்கு உறுதிப்படுத்த வேண்டிய தேவை உங்களுக்குண்டு. இருந்தாலும் பெரும்பாலும் திருமணத்தின் பின் அநேக காதலிகள் மிகவும் குறுகிய மனப்பாங்குள்ள மனைவிகளாக மாறி விடுகின்றனர். அவர்கள் தாமுண்டு தம் குடும்பமுண்டு என்று வாழவே விரும்புவார்கள். அப்போது உமது சகோதரிகளுக்கான உமது கடமையைச் செய்ய முடியாது போகலாம்.
இப்போது உரிமையுடன் உதவியை எதிர்பார்க்கும் உமது சகோதரிகள் திருமணத்தின் பின் விலகியிருக்க வேண்டிய நிலைமையும் அநேகமான குடும்பங்களில் இருக்கத்தான் செய்கின்றன. எனவே முதலில் சகோதரிகளின் கடமையை முடித்து விட்டு காதலியைக் கரம் பற்றினால் நிம்மதியாக வாழலாம். ஆயிரம் பெண்கள் காதலியாகலாம். ஆனால் நல்ல உடன் பிறப்பாக இருக்க முடியாது.