அலட்டல் இல்லாத ஸ்டைல், அதிரடியான நடிப்பால் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கவைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவரது நடிப்பினை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் என்றால், இவரது ஸ்டைலை ரசிப்பதற்காகவே பல கோடி கூட்டம் இருக்கும். ரீல் வாழ்க்கையில் வெற்றிகரமான நட்சத்திரமாய் ஜொலிக்கும் ரஜினிகாந்த், தனது ரியல் வாழ்க்கையிலும் வெற்றிகரமான மனிதர்தான்.
1978 ஆம் ஆண்டுகளில் முன்னிலை நடிகராய் இருந்த ரஜினிகாந்த், தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டது ஒரு சுவாரசிய காதல் கதைதான்.
எத்திரராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த லதாவிற்கு தனது கல்லூரியின் சார்பில் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அது, முன்னணி நடிகரான ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான்.
தில்லு முல்லு படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்தபோதுதான், லதா அவரை முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.
பேட்டியின் போது பல்வேறு கேள்விகளை லதா கேட்டுள்ளார். இது ரஜினிகாந்திற்கு பிடித்துள்ளது. பேட்டியின் போதே தனது காதலை சொல்லாத ரஜினி, நேரடியாக என்னை திருமணம் செய்துகொள்கிறாயா? என கேட்டுள்ளார்.
இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத லதா, நான் எனது வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ரஜினியின் சொந்த வாழ்க்கை பற்றி அறிய ஆரம்பித்துள்ளார் லதா. சிறு வயதில் அம்மாவை இழந்த ரஜினி, பல தடைகளை தாண்டிதான் சினிமாவில் வெற்றிபெற்றுள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக சூட்டிங் சென்றுவந்த காரணத்தால் ரஜினிகாந்த் நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் நரம்பியல் பிரச்சனையில் இருந்து விடுபட்டால், தான் மொட்டை அடித்துக்கொள்கிறேன் என நேர்த்திவைத்துக்கொண்டார் லதா.
அதன்படியே மீண்டு வந்த ரஜினிக்காக, லதா மொட்டை அடித்துக்கொண்டார். இதற்கிடையில் தான் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன், லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.
என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா? என்ற ஒரே கேள்வியால் லதாவை திணறடித்த ரஜினி, 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் வைத்து லதாவை திருமணம் செய்துக் கொண்டார்.