தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே
தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது தான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
நகைச்சுவை அரசி மனோரமாவின் ஒரே மகன் பூபதி. 1965-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் மூலம் 1979-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டார். இப்படத்தில் கதாநாயகன் விஜயனின் தம்பி வேடத்தில் நடித்தார். மேலும் ‘ஆராதனை’, ‘மணல் கயிறு’, ’குடும்பம் ஒரு கதம்பம்’, ‘மனைவி ரெடி’, ‘டில்லி பாபு’ உள்ளிட்ட 20 படங்களில் நடித்துள்ளார்.
எஸ்.ஆர்.தசரதன் இயக்கத்தில் ‘சரணம் ஐயப்பா’ என்ற பக்திப் படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தது அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.மனோரமா சொந்தமாக தயாரித்த ஒரே படமான “தூரத்து சொந்தம்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். எனினும் வணிக ரீதியில் இப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுதல்களைப் பெற்றது.
பூபதி அவரது தாயார் மனோரமாவுடன் பல நாடகங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை எஸ்.எம்.ராமனாதன். இவருக்கு ராஜராஜன் என்ற ஒரு மகனும் அபிராமி, மீனாட்சி என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். ராஜராஜன் காஞ்சிபுரத்தில் மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார்.