எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவது சம்பந்தமாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்சவும் போட்டியிட மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“குடும்பத்தில் சின்ன விருந்து நடந்தது. அப்போது ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசவில்லை. குடும்பங்கள் ஒன்று சேர்வதில்லையா?. “சகோதர நிறுவனம்” என்று எம்மீது பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
எங்களது குடும்பத்தில் மூத்தவர் சமல் ராஜபக்ச குடும்ப சந்திப்புகளை கூட்டுவார். குடும்பத்தினர் சந்தித்து கொண்ட விருந்தில் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவது என்று தீர்மானம் எடுக்கவில்லை.
பசில் போட்டியிட உள்ளதாக கூறினார்கள். கோத்தபாய போட்டியிட போகிறார் என்று கூறுகின்றனர். சமல் போட்டியிடுவார் என கூறினர்.
குடும்பத்தில் இருப்பவர்கள் பற்றி பெரிய கதைகள் பேசப்பட்டன. தான் போட்டியிட போவதில்லை என பசில் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய நபரை நான் இன்னும் தேடுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியும் இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு அமைய நாங்கள் எமது வேட்பாளரை தீர்மானிப்போம்” என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.