இலங்கையில் ஆட்கடத்தலும் சித்திரவதைகளும் இராணுவம் உள்ளிட்ட அரச படையினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கை படையினரின் மரபணுக்களின் இவ்வாறான செயல்கள் ஆழமாக உறைந்துபோயுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்களும் சித்திரவதைகளும் தொடர்வதோடு, வதை முகாம்களும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள சூக்கா, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்து இவ்விடயங்கள் குறித்து நீதியான விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில், இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை தொடர்பாக ஆராயப்படவுள்ளது. இந்நிலையிலேயே யஸ்மின் சூக்கா இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத் தரப்பினரும் தொடர்ந்தும் தமிழ் மக்களை இலக்குவைப்பதோடு, அவர்களைக் கடத்தி சட்டவிரோத முகாம்களின் தடுத்து வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துவதற்கும் காரணம், குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையே என யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இவ்வாறான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 36 தமிழர்களிடம் ஐரோப்பிய நாடுகளில் வைத்து சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சூக்கா, போர்க்குற்றங்கள் மற்றும் போருக்கு பிந்திய காலங்களில் இடம்பெற்ற கொடூரங்கள் தொடர்பாக இதுவரை சுமார் 200 இலங்கையர்களின் சாட்சியங்கள் தமது அமைப்பிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான கூட்டு ஆட்சியிலும் இக் குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாமல் உள்ளதென யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளதோடு, சர்வதேசத்திற்கு அளித்த மனித உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசாங்கம் செயற்படுவது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சித்திரவதைகளும் கடத்தல்களும் தொடர்கின்றன என்பதை மையமாகக் கொண்டு, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவிற்கு ஏற்கனவே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையொன்றை அனுப்பி வைத்திருந்தது. எனினும், குறித்த அறிக்கையில் காணப்படும் விடயங்களை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.