சென்னையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் அவருடைய பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
நாகர்கோவில் பூதப்பாண்டி ஞாலம் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை சந்தியா கடந்த ஜனவரி மாதம் சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனே, அவரை கொலை செய்து உடல் பாகங்களை குப்பை தொட்டியில் வீசியது தெரிய வந்தது. சந்தியாவின் உடல் பாகங்களான இடுப்பு பகுதி, கை, கால்கள் கிடைத்த நிலையில் தலையை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் 2½ மாதங்களாகியும் சந்தியாவின் தலை மட்டும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சந்தியாவின் உடல் பாகங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவரது பெற்றோர் ராமச்சந்திரன், தாய் பிரசன்னகுமாரி, சித்தி உஷா, அவரது மகள் விஜி ஆகியோர் இன்று சென்னை வந்தனர். அவர்களிடம் சந்தியாவின் உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டது.
இதனை பெற்றுக் கொண்டு அவர்கள் இன்று மாலை ஊருக்கு செல்கிறார்கள். ஞாலம் கிராமத்தில் சந்தியாவின் உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளது.
தலை கிடைக்காத நிலையில் கொலையுண்டது சந்தியாதான் என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இன்னும் அந்த சோதனை நடைபெறவில்லை.
பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் இதுவரையில் டி.என்.ஏ. சோதனை நடத்தப்படாதது ஏன்? என்கிற கேள்வியை சந்தியாவின் குடும்பத்தினர் எழுப்பி உள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கோர்ட்டு அனுமதிக்காக காத்திருப்பதாகவும் விரைவில் டி.என்.ஏ. சோதனை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.