உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி காங்கிரஸ் நிர்வாகிகளின் முயற்சியால் ராகுல் காந்தியை சந்தித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கல்பட்டா பகுதியை சேர்ந்தவர் எல்சி (வயது 68). இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக காங்கிரஸ் அபிமானிகளாக இருந்து வருகிறார்கள். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த எல்சிக்கு பிரியா என்ற மகளும், தேவிகா என்ற பேத்தியும் உள்ளனர்.
தேர்தல் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் நடைபெறும்போது அங்கு எல்சியும் தவறாமல் இருப்பார். காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்கும் எல்சிக்கு எப்படியாவது ராகுல்காந்தியை நேரில் சந்தித்துவிட வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்துவந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்தி வயநாட்டில் வேட்மனு தாக்கல் செய்ய வரும் தகவல் எல்சிக்கு கிடைத்ததும் அவர் மகிழ்ச்சி அடைந்தார். இந்த முறை எப்படியாவது ராகுலை நேரில் சந்தித்து விட வேண்டும் என்று திட்டமிட்டார். ஆனால் ஏழை தொண்டரான தன்னால் அது எளிதில் முடியாது என்பதை அவர் உணர்ந்தே இருந்தார்.
இதனால் தனது விருப்பத்தை அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அனந்தகுமார் என்பவரிடம் தெரிவித்தார்.
அவரும் எல்சியின் விருப்பத்தை புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். இது ராகுல்காந்தியின் கவனத்திற்கும் சென்றது. அவரும் தான் வயநாடு வரும் போது எல்சியை சந்திக்க விரும்புவதாக கேரள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தார்.
இதுபற்றி எல்சியிடம் காங்கிரசார் தெரிவித்த போது அதை நம்பமுடியாமல் அவர் திகைத்துப்போனார். ராகுல் வயநாடு வரும் நாளை எதிர்நோக்கி எல்சி காத்திருந்தார். இந்த நிலையில் எல்சிக்கு காய்ச்சல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று ராகுல் வயநாட்டிற்கு வரும் தகவல் எல்சிக்கு கிடைத்த போது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கும் தன்னால் எப்படி ராகுலை சந்திக்க முடியும் என்று நினைத்து வேதனை அடைந்தார். ஆனாலும் காங்கிரஸ் நிர்வாகிகள் எல்சியை ஒரு ஆட்டோவில் ஏற்றி கல்பட்டாவுக்கு அழைத்துச் சென்று ராகுலை சந்திக்க வைத்தனர். அவருடன் மகள் பிரியா, பேத்தி தேவிகாவும் சென்றனர்.
எல்சியை அன்புடன் அரவணைத்து அவருடன் ராகுல் சிரித்து பேசினார். அவரது குடும்பம் பற்றியும் விசாரித்தார். ராகுலுடன் பிரியங்காவும் இருந்ததால் எல்சியின் மகிழ்ச்சி இரட்டிப் பானது.
ராகுலை சந்தித்தது பற்றி எல்சி கூறும்போது ஏழை தொண்டரின் ஆசையை நிறைவேற்றிய ராகுலை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் ராகுலை பார்க்கமுடியாதோ? என்று நினைத்தேன். கடவுள் அருளால்தான் இது நிறைவேறி உள்ளது. நடந்தது எல்லாம் கனவுபோல உள்ளது என்றார்.