செம்பட்டி அருகே, குடும்ப தகராறில் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். மனைவியையும் சுத்தியலால் அடித்து கொல்ல முயன்றார்.
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி அருகே உள்ள மட்டப்பாறையை சேர்ந்தவர் தங்கமணி (வயது 35). அவருடைய மனைவி முனீஸ்வரி (27). இந்த தம்பதிக்கு சந்தோஷ்குமார் (7) என்ற மகனும், வர்ஷஹரிணி (4) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர்.
இதனையடுத்து ஊர்ப்பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சேர்ந்து வாழ அறிவுறுத்தினர். அதன்படி கடந்த 2 மாதங்களாக, முனீஸ்வரியின் சொந்த ஊரான செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையில் ஒரு வாடகை வீட்டில் கணவன்–மனைவி வசித்து வந்தனர். சித்தையன்கோட்டையில் உள்ள தனியார் மில்லில் 2 பேரும் வேலை செய்தனர்.
கணவன்–மனைவி வேலைக்கு செல்வதற்கு முன்பு மகள் வர்ஷஹரிணியை, முனீஸ்வரியின் தந்தை கர்ணன் வீட்டில் விட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய கணவன்–மனைவி, கர்ணனின் வீட்டில் இருந்த மகளை அழைத்து வந்தனர்.
இதற்கிடையே வீட்டுக்கு வந்த தங்கமணிக்கும், முனீஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. முனீஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தங்கமணி தகராறு செய்தார். மேலும் முனீஸ்வரியை தனது ஆசைககு இணங்குமாறு தங்கமணி வற்புறுத்தினார். அதற்கு முனீஸ்வரி மறுத்து விட்டார்.
இதனையடுத்து, தனது மகள் வர்ஷஹரிணியை தனது மார்போடு அணைத்தபடி முனீஸ்வரி படுத்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கமணி, வீட்டில் இருந்த சுத்தியலால் முனீஸ்வரியின் தலையில் அடித்தார். இதில் முனீஸ்வரி மயக்கம் அடைந்தார். ஆனால் அவர் இறந்து விட்டதாக தங்கமணி கருதினார்.
மேலும் ஆத்திரம் தீராத தங்கமணி, பச்சிளம்குழந்தை என்று கூட பாராமல் ஆட்டை அறுப்பது போல கத்தியால் வர்ஷஹரிணியின் கழுத்தை அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். பின்னர் தங்கமணி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே மயக்கம் தெளிந்த முனீஸ்வரி தனது கணவர் தூக்கில் தொங்குவதையும், கழுத்து அறுக்கப்பட்டு மகள் கொலை செய்யப்பட்டிருப்பதையும் கண்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த முனீஸ்வரியை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தங்கமணி, வர்ஷஹரிணி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.