அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள தகவல் ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா குடிமக்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை என வெளியாகியுள்ள தகவல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த உலக நாடுகள் அனைத்தும் பரபரப்பாக அமெரிக்க தேர்தலை உணிப்பாக கவனித்து வந்தது அனைவரும் அறிந்தது தான்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக அரசியல் பின்னணி இல்லாத டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது உலக நாடுகள் அனைத்திலும் முக்கிய செய்தியாக வெளியானது.
இதுமட்டுமில்லாமல், இன்றளவும் டொனால்ட் டிரம்பின் வெற்றியை தான் முக்கிய செய்தியாக உலக பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன.
ஆனால், ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா குடிமக்களுக்கு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது இதுவரை அந்நாட்டு அரசு தெரியப்படுத்தாமால் ரகசியமாக வைத்து வருகிறது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியாவில் உள்ள பி.பி.சி செய்தியாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பற்றி இங்குள்ள ஒருவருக்கும் எதுவும் தெரியாது.
கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டு 3 நாட்களுக்கு பிறகு தான் தனது குடிமக்களுக்கு வட கொரியா அரசு அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியது’ என அந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் வெறுப்பையும் அதிருப்தியையும் பெற்று வரும் வட கொரியா அரசு அங்கு ஒரு தனி உலகத்தையே நடத்தி வருகிறது.
வட கொரியா நாட்டில் தனியார் தொலைக்காட்சிகள் செயல்பட அனுமதி கிடையாது. இதனால், அரசு அதிகாரப்பூர்வமாக ஒளிப்பரப்பும் தகவல் மட்டுமே குடிமக்களுக்கு சென்றடையும்.
சில முக்கிய அதிகாரிகள் தவிர நாடு முழுவதும் இணையத்தளம் பயன்படுத்த குடிமக்களுக்கு தடை உள்ளதால் அவர்களால் இணையத்தளம் வழியாகவும் இச்செய்தியை அறிந்துக்கொள்ள முடியாது.
மேலும், வட கொரியா நாட்டிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர்கள் கைப்பேசி வைத்துக்கொள்ள அனுமதி இல்லாததால் அவர்கள் மூலமும் குடிமக்கள் செய்தியை தெரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை.
இதுபோன்ற ஒரு சூழலில் இதுநாள் வரை வட கொரியா குடிமக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி யார் என்ற தகவல் தெரியப்படுத்தவில்லை என்பது பெரும் வேதனையான செய்தியாகும்.