போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கொழும்பு நகரிலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் புதிய போக்குவரத்து விதிமுறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கொழும்பு நகரிலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் புதிய போக்குவரத்து விதிமுறை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சித்திரைப் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, பாடசாலை ஆரம்பிக்கும் தினத்திலிருந்து கொழும்பு நகரிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு இப்புதிய போக்குவரத்து விதிமுறை கடைப்பிடிக்கப்படும்.
பாடசாலைகளில் மாணவர்களை விடவும் அழைத்துச் செல்லவும் வரும் வாகனங்களை, 3 நிமிடங்களுக்கு மாத்திரமே பாடசாலைகளுக்கு அருகில் நிறுத்த முடியும் என்பதே அப்புதிய விதிமுறையாகும்.
தேஸ்டன் கல்லூரி, ரோயல் கல்லூரி, டி.எஸ் சேனநாயக்க, முஸ்லிம் மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரி, ஆனந்தக் கல்லூரி, நாலந்தாக் கல்லூரி, மியூசியஸ் கல்லூரி உள்ளிட்ட பாடசலைகள் இப்புதிய போக்குவரத்துத் திட்டத்தினுள் அடங்கும்.
மேலும், 4 கட்டங்களில் புதிய போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.