மாணவர்கள் தமது சித்திரை விடுமுறைக் காலத்தினை மகிழ்ச்சிகரமாக அனுபவிக்கும் வகையில் தனியார் கல்வி நிலையங்களில் இடம்பெறும் அனைத்து வகுப்புகளும் 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 17ஆவது அமர்வானது கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற போதே மேற்படி விடயமானது முன்மொழியப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது முதலாந் தவணைக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள போதும் மாணவர்கள் தங்கள் விடுமுறையை மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சிகரமாக அனுபவிக்க முடியாத நிலை உள்ளதாக சபையில் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
அத்தோடு இது தொடர்பில் பெற்றோர்களாலும், மாணவர்களாலும் விடுக்கப்பட்ட வேண்டுகோளைச் சுட்டிக்காட்டி மேற்படி தீர்மானமானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி முதலாம் தவணைக்கான விடுமுறையையும், அதனையொட்டி வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டினையும் மாணவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மாநகர சபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களுக்கும் எதிர்வரும் 10.04.2019 தொடக்கம் 20.04.2019 வரையான காலப்பகுதியில் வகுப்புகளை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தனியார் கல்வி நிலையங்களின் ஒழுங்குபடுத்தல் தொடர்பில் அவ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் மாநகர ஆணையாளரால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.