சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டு விட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவுகிறது. திரிஷா சினிமாவுக்குள் நுழைந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை ரஜினியுடன் ஜோடி சேர்ந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் கூடவே நடந்து வருகிறது. ரஜினி தற்போது ‘2.ஓ’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு பா.ரஞ்சித் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. இப்படம் ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என்பது குறித்து படக்குழுவினர் இன்னும் வாய் திறக்கவே இல்லை.