காங்கிரஸாலேயே பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் விவேகமாக செயற்பட்டிருந்தால், பாகிஸ்தான் உருவாகி இருக்காது என அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம், லட்டூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகையில்,
“இந்த தேசம் கடந்த 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் சிறிது விவேகத்துடன் செயற்பட்டிருந்தால், பாகிஸ்தான் எனும் நாடு உருவாகி இருக்காது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை பாகிஸ்தானுக்கு ஆதரவான விடயங்களைக் கொண்டதாகவே இருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற ஒரு கட்சியின் தலைவர் ஜம்மு காஷ்மீருக்கு தனியாக பிரதமர் தேவை எனக் கேட்கிறார்.
காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்துள்ளன. மகாராஷ்டிராவில் வலிமையான மனிதர் எனச் சொல்லப்படும் சரத்பவார் எவ்வாறு இதுபோன்ற சிந்தனைகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார் என்பதை நினைக்கையில் வியப்பாக இருக்கிறது.
பா.ஜ.க. புதிய இந்தியா என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. இந்த கொள்கையுடைய பா.ஜ.க. அரசு தீவிரவாதிகளை அவர்களின் இடத்திலேயே சென்று தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தவர்கள்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக எமது விமானப் படையினர் பாலகோட்டில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு திரும்பினார்கள். ஆனால், இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்கின்றன.
காங்கிரஸ் கட்சி ஊழலைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. இப்போது தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதாரவான தலைவர்களின் வீடுகளில் பெட்டி, பெட்டியாக பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. வாக்குகளை விலைக்கு வாங்குவது அரசியல் கலாசாரமாகி வருகிறது.
கடந்த 6 மாதங்களாக காவலாளி திருடனாகிவிட்டார் என்று என்னை குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் இவ்வாறு கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து வந்தன. யார் உண்மையான திருடன்? என்று அவர் வினவினார்.