ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இழுபறி தொடர்கின்றன என செய்திகள் கசிகின்றன. இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன? என சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் ஜனாதிபதியிடம் வினவினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாவது; இலங்கையில் மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள். நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை. இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் பேச்சு நடைபெற்றது.
எனினும், இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதற்காக இழுபறி தொடர்கின்றது எனக் கூற முடியாது. சிலவேளை பேச்சுத் தொடரக்கூடும் எனவும் தெரிவித்திருந்தார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராகக் களமிறக்குவது என்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும், மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியினருக்கு இடையேயும் அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
இருப்பினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் களமிறங்குவதற்கு மைத்திரி திட்டமிட்டுள்ளார் என்று சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், மஹிந்த ராஜபக்ச தரப்பினரோ ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் பின்னணியிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கும் போது,உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை நாம் எடுப்போம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை. எனவே, இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது.இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள். நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம். மூவின மக்களும் நிம்மதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் ஆட்சியே தொடர வேண்டும். இதுவே எமது விருப்பம்.
நான்தான் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றேன். எமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நானே இறுதி முடிவெடுப்பேன். எமது கட்சி வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் நானே இறுதித் தீர்மானம் எடுப்பேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.