வங்காளதேசத்தில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி (வயது 19) என்ற இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறான எண்ணத்தில் தொட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நஸ்ரத் ஜகான் ரபி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமை ஆசிரியரை கைது செய்தனர். இதையடுத்து அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிலரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து, தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நஸ்ரத் ஜகான் ரபி பொய் புகார் அளித்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்த 11 நாட்களுக்கு பிறகு தேர்வு எழுதுவதற்காக நஸ்ரத் ஜகான் ரபி பள்ளிக்கு சென்றார். அப்போது, அவரின் தோழி ஒருவர், அவரை பள்ளிக்கூடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார்.
அங்கு பர்தா அணிந்திருந்த 5 பேர் நஸ்ரத் ஜகான் ரபியை சூழ்ந்துகொண்டு தலைமை ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டினர். அதனை ஏற்க மறுத்ததால் அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து, பரிதாபமாக இறந்தார்.
இந்த விவகாரம் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.