அமெரிக்காவின் விண்வெளித்துறை வரலாற்றில் முதல் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜெர்ரி காப்(88) மரணம் அடைந்தார்.
ஆண்கள் மட்டுமே கோலோச்சிவந்த அமெரிக்காவின் விண்வெளித்துறை ஆராய்ச்சி கூடமான நாசாவில் உரிய பயிற்சிகளை பெற்று 1961-ம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பை பெற்றவர் ஜெர்ரி காப்.
இவருடன் சேர்ந்து மொத்தம் 13 பெண்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கான உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றதால் இவர்களை ‘மெர்குரி 13’ என்று ஊடகங்கள் குறிப்பிட்டன.
ஆனால், தேர்ச்சிக்கு பின்னர் எந்த விண்வெளி பயணத்திலும் ஜெர்ரி காப்-புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அனைத்து துறைகளிலும் ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பிவந்த இவர் ஆரம்ப காலத்தில் ஆண்களுக்கு போர் விமானங்களை ஓட்ட கற்றுத்தரும் பயிற்சியாளராக பணியாற்றினார்.
வட அமெரிக்காவில் தொலைதூர பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவுப்பொருள் மற்றும் மருந்துகளை கொண்டு சேர்க்கும் விமானியாக சுமார் 30 ஆண்டுகாலம் ஜெர்ரி காப் சேவையாற்றினார்.
அப்போது, குறுகிய நேரத்தில் விமானங்கள் சென்று சேரும் வகையில் புதிய வழித்தடங்களை கண்டுபிடித்து பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கினார். இதற்காக இவரது பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் போனாலும், பின்னர் சுனிதா வில்லியம்ஸ் உள்பட சில பெண்களின் பெயர் விண்வெளித்துறை வரலாறில் இடம்பெற காரணமாக அமைந்த ஜெர்ரி காப்(88) கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.