தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகை சில மாதங்களாக ‘மீ டூ’ இயக்கம் உலுக்கி வருகிறது. பட வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை நடிகைகள் மீ டுவில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.
தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கி உள்ளனர். தெலுங்கு பட உலகை நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்கள் சொல்லி அதிரவைத்தார்.
‘மீ டூ’வுக்கு ஆதரவும், அதை சில நடிகைகள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. திரையுலகில் நடிக்கும் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ‘மீ டூ’ ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது.
இந்த குழுவின் தலைவராக நடிகர் சங்க தலைவர் நாசர் செயல்படுவார். சங்க உறுப்பினர்களாக விஷால், கார்த்தி, பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வக்கீல் உள்பட 8 பேர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரையுலகில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் ‘மீ டூ’ ஒருங்கிணைப்பு குழுவில் புகார் செய்யலாம். குழுவினர் நேரில் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்கான பாதுகாப்பையும் இந்த குழு உறுதி செய்யும். மீ டூ குழு அமைக்கப்படுவதன் மூலம் தமிழ் பட உலகில் பாலியல் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.