டெல்லியில் நேற்று நடந்த வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
வர்த்தகர்கள், வியாபாரிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. உங்களின் பங்களிப்பு இல்லை என்றால் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு அதிகரித்து இருக்காது. கடந்த 5 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் வியாபாரிகளுக்கு கடன் பெறுவதற்கான வசதிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது.
உங்களின் ஓய்வு இல்லாத உழைப்பு என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும். வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படும். கடன் அட்டையும் அளிக்க இருக்கிறோம். சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.
காங்கிரஸ் கட்சியினர் தொழிலாளர்களை பார்த்து திருடர்கள் என கூறி அவமானப்படுத்தி வருகின்றனர். மேலும் விலைவாசி உயர்வுக்கு காரணம் நீங்கள் தான் என குறைகூறுகின்றனர்.
ஆனால் நாங்கள் ஒரு லட்சம் தொழில் முனைவோருக்கு முத்ரா திட்டத்தில் கடனை உடனடியாக வழங்கி வருகிறோம். வர்த்தகர்களுக்கு ரூ.1 கோடி வரையிலான கடனை வெறும் 59 நிமிடத்தில் கிடைக்க வழிவகை செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.