வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி வடக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் வரவேற்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறினார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரியர் எட்மிரல் மொஹான் விஜேவிக்ரம மற்றும் வடமாகாண முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் இணைந்து எழுதியிருந்த “குழப்பநிலை மற்றும் ஸ்திரத்தன்மை” என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ-
வடமாகாண சபை தேர்தலை நடத்த தயாரான போது, அங்கு தேர்தலை நடத்தினால் அதில் தோல்வியடையலாம் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அதேபோல், அந்த தேர்தலினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம்பெறும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் என்னிடம் கூறினார். எவ்வாறாயினும், வட மாகாணசபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்தார். யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்து, அப் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.