இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றைய தினம் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 290 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
கடும்போக்குவாத அமைப்புக்களின் இணைய செயற்பாடுகளை கண்காணிக்கும் சயிட் (SITE)என்னும் புலனாய்வு அமைப்பு இலங்கைத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக அண்மையில் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பழி தீர்க்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இணைய தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் பெருமிதம் அடைந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
உயிர்ச் சேதங்கள் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கையை ஐ.எஸ் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களின் வழியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைதாரிகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வார் என சமூக ஊடகங்களில் இந்த தாக்குதல் பற்றி தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் பதிவுகளை இட்டு வருவதாக சயிட் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ரிடா காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சில காலங்களுக்கு முன்னதாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகவே தென்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்த தீவிரவாத அமைப்பில் அங்கம் வகிப்பதாகவும், தீவிரவாத தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு உரிமை கோருவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதாக தென்படுகின்றது எனவும் காட்ஸ் தெரிவித்துள்ளார்.