“இஸ்லாத்தில் விவாகரத்து செய்வது மிகவும் எளிது. ‘தலாக் தலாக் தலாக்’ என்று மூன்று முறை சொன்னால் மண முறிவு ஏற்பட்டு விடும்; முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து செய்வது அதிக அளவில் உள்ளது” என்பன போன்ற கருத்துகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இது மிகவும் தவறான கருத்து. முஸ்லிம்களிடையே அதிக அளவில் விவாகரத்து நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்தும் எந்த உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது உண்மை நிலவரமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில், ஒரு நபித்தோழர் ஒரே மூச்சில் மூன்று முறை ‘தலாக்’ கூறி விட்டார். இதைக் கேள்விப்பட்ட நபிகளார், “நான் உங்களுக்கு மத்தியில் உயிரோடு இருக்கும்போதே இறை வசனங்களோடு விளையாடுகிறீர்களா?” என்று மிகுந்த கோபத்தோடு கேட்டார்கள்.
ஒரே தடவையில் மூன்று முறை ‘தலாக்’ கூறினாலும் அது ஒருமுறை சொல்லப்பட்டதாகவே கருதப்படும். ருக்கானா (ரலி) தனது மனைவியை ஒரே இடத்தில் வைத்து மூன்று முறை ‘தலாக்’ கூறி விட்டார். பின்னர் அதற்காகக் கடுமையாகக் கவலைப்பட்டார். “நீங்கள் எவ்வாறு தலாக் சொன்னீர்கள்?” என்று நபிகளார் அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் ‘மூன்று தலாக்’ என்று பதில் அளித்தார். நபிகளார் கேட்டார்கள், ‘ஒரே சமயத்திலா?’. அதற்கு ‘ஆம்’ என்று அவர் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதெல்லாம் ஒரு தலாக் தான். நீங்கள் விரும்பினால் உங்கள் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்” என்றார்கள். அவரும் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக்கொண்டார். (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அவர் களுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல் கலீபா (ஜனாதிபதி) அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் காலத்திலும் மூன்று தலாக்குகள் ஒரே தலாக்காகவே கருதப்பட்டது. ‘முத்தலாக்’ என்பது பிற்காலத்தில் வந்த விவாகரத்து முறை. இதனால் இது நூதன தலாக் (தலாக்குள் பித்அத்) என்று கூறப்படுகிறது.
“எல்லா நூதனங்களும் (பித்அத்) வழிகேடு ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தலாக்குகள் அல்லாஹ் ஏற்படுத்திய சட்டத்திற்கும், நபிகளாரின் நடைமுறைக்கும் எதிரானது ஆகும் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.
ஒரே மூச்சில் முத்தலாக் சொல்வது மார்க்க ரீதியாகத் தடுக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆயினும் சில மார்க்க அறிஞர்கள் ஒரே மூச்சில் முத்தலாக் கூடும் என்று கூறுகிறார்கள்.
ஆண்களுக்கு இருப்பது போலவே, பெண்களுக்கும் விவாகரத்து கோரும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கு, ‘குலா’ என்று பெயர்.
“அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(பிரிந்து) விடுவதில் இவ்விருவர் மீதும் குற்றமில்லை” (திருக்குர்ஆன் 2:229) என்று திருமறை கூறுகிறது. பெண் தரப்பில் விவாகரத்து கோரிக்கை வரும்போது கொடுத்த ‘மஹரை’ ஆண்கள் திரும்பக் கேட்கலாம் என்பதே இதன் கருத்தாகும். ஆனால் ஒரு ஆண் விவாகரத்து கோரிக்கையை முன் வைக்கும்போது அவன் கொடுத்த மஹரைத் திரும்பக் கேட்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே, இந்த வசனத்திற்கு முந்தைய பகுதியில், “நீங்கள் (மனைவியரான) அவர்களுக்குக் கொடுத்தவற்றில் இருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே நபிகளாரும் ஒருமுறை தீர்ப்பு அளித்துள்ளார்கள். ஒருமுறை ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “என் கணவர் நல்லவர்தான்; ஆனால் அவருடன் வாழ தனக்கு விருப்பம் இல்லை” என்று கூறி விவாகரத்து கோரியபோது, நபிகளார் அந்தப் பெண்ணின் விவாகரத்து கோரிக்கையை ஏற்றார்கள். அந்தப் பெண்ணை நோக்கி, “கணவர் உனக்குக் கொடுத்த தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்கத் தயாரா?” என்று கேட்டார்கள். “ஆம், தந்து விடுகிறேன்” என்று அந்தப் பெண் பதில் அளித்தார். “தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவளை ஒருமுறை தலாக் சொல்லி விடுங்கள்” என்று ஸாபித்திடம் கூறினார்கள்.
இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் காலத்தில், ஒரு பெண் விவாகரத்து கோரிக்கையை முன்வைத்தார். வேற்றுமைகளை மறந்து கணவனுடன் தொடர்ந்து வாழும்படி கலீபா உமர் கூறியதையும் அந்தப் பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பெண்ணை ஒரு தனி அறையில் மூன்று நாட்கள் தங்க வைக்க கலீபா ஏற்பாடு செய்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து, “இப்போது என்ன சொல்கிறாய்?” என்று கலீபா கேட்டார். அதற்கு அந்தப் பெண், “இந்த மூன்று நாட்கள்தான் நான் அமைதியாகக் கழித்த நாட்கள்” என்று பதில் அளித்தார். இதைக் கேட்ட மறுநொடியே அந்தப் பெண்ணின் விவாகரத்து கோரிக்கையை மறுப்பேதும் சொல்லாமல் உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
எனவே விவாகரத்து கோரும் உரிமை ஆணுக்கு இருப்பது போலவே பெண்ணுக்கும் இருக்கிறது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை விவாகரத்து என்பது ஓர் அறுவை சிகிச்சைக்கு ஒப்பானது என்று ஒப்பீடு செய்வது பொருத்தமாக இருக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போன நிலையில் அறுவை சிகிச்சைக்கு உடன்படுவதைத் தவிர வேறு சிறந்த மார்க்கம் (வழி) இல்லை என்பதால்தான் இஸ்லாம் மார்க்கம், மணவிலக்குக்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.