நாட்டில் இடம்பெற்றுள்ள தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பையும் அதற்கு அனுசரணை வழங்கியுள்ள அனைத்து சக்திகளையும் அவசரகால சட்டத்தின்கீழ் பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த அமைப்பை தடைசெய்யும்போது அவர்களுடைய ஆயுத பாவனை, உரைகள், ஆட்சேர்ப்பு, வகுப்பு எடுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் கவனத்திற் கொள்ள வேண்டும். இதற்கு கால அவகாசம் தேவைப்படாலும் இந்த செயற்பாடுகள் யாவும் மிகவும் ஆழமான முறையில் கையாளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
சர்வதேச அமைப்பொன்று இலங்கையர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. நாம் ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டுவதை விடுத்து இச்சம்பவம் ஏன் நடந்தது? இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்? மீண்டும் இதுபோன்றதொரு சம்பவம் இலங்கையில் நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.