டொனால்ட் ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாள், அமெரிக்காவில் உள்ள 25 நகரங்களில் மக்கள் வீதிகளில் திரண்டு ‘எங்கள் அதிபர் ட்ரம்ப் அல்ல!’ எனப் போராடத் தொடங்கிவிட்டனர்; பெருந்துயர் நிகழ்ந்து விட்டதைப்போல், பல அமெரிக்கர்கள் மெழுகுவத்தியை ஏந்தியபடி வீதிகளில் ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறார்கள். ‘
டொனால்ட் ட்ரம்ப்பை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என, என் மகளிடம் எப்படிச் சொல்வேன்?’ என ட்விட்டரில் மனம் வெதும்பி வெடித்திருக்கிறார் ஓர் அமெரிக்கத் தாய். `ட்ரம்பைத் திரும்பப் பெறுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?’ என, சிலர் கூகுளிடம் அப்பாவித்தனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டு சமூக வலைதளங்களில் குழுவாகத் திரண்டுள்ள பலர், ‘நடந்தது நடந்துவிட்டது. அடுத்த தேர்தலில் ட்ரம்ப்பைத் தடுத்து நிறுத்த என்ன செய்யவேண்டும் என்று இப்போதே யோசிப்போம்’ என செயலில் இறங்கிவிட்டார்கள்.
எப்படிச் சாத்தியமானது இந்த வெற்றி?
தொடக்கத்தில் இருந்தே அதிகம் பரிகசிக்கப்பட்ட, அதிகம் புறக்கணிக்கப்பட்ட, அதிகம் பேரால் வெறுக்கப்பட்ட ஒருவரால் எப்படி வெற்றிபெற முடிந்தது? எல்லா பத்திரிகைகளும், எல்லா டி.வி சேனல்களும், கிட்டத்தட்ட எல்லா கட்டுரையாசிரியர்களும், பத்தி எழுத்தாளர்களும் `ஹில்லரி கிளின்டன்தான் வெற்று பெறுவார்’ எனத் தீர்ப்பு எழுதிவிட்ட நிலையில், `எப்படி இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டது?’ என்பதற்கு இப்போதுதான் விடைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.
ட்ரம்ப்பின் பிரசாரத்துக்குக் கிடைத்த வெற்றி இது.
அமெரிக்காவில் பெருகிக்கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வை, அவர் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டார். செல்வந்தர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்குமான இடைவெளி முன்பைவிட பெருகியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதற்குக் காரணம், ஒபாமாவின் பலவீனமான பொருளாதாரப் பார்வை என்று அவர் குற்றம்சாட்டியபோது, அமெரிக்கர்கள் அதை ஏற்றுக்கொண்டனர்.
ஒபாமாவை சற்றே இடது சாய்வுகொண்ட அதிபராகச் சித்தரிக்கும் முயற்சியிலும் ட்ரம்ப்புக்கு வெற்றியே கிடைத்தது. ஒபாமாவால் பலமான, அழுத்தமான முடிவுகளை எடுக்க முடியாமல் போய்விட்டது. `அகதிகள் தொடங்கி சிறுபான்மையினர் வரை அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அவர் முயற்சியால் பாதிக்கப்பட்டவர்கள், அமெரிக்க வெள்ளைத் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும்தான்’ என ட்ரம்ப் திரும்பத் திரும்ப வாதிட்டபோது கணிசமானவர்கள் ட்ரம்ப்பை முழுமையாக நம்பினஹில்லரியின் தோல்விக்குக் காரணம், அவருடைய நம்பகத்தன்மை மீது ஏற்பட்ட சந்தேகம். தேர்தல் தொடங்குவதற்கு 48 மணி நேரம் முன்னர்கூட இமெயில் கசிவு விவகாரத்துக்காக எஃப்.பி.ஐ., ஹில்லரியைத் துரத்திக்கொண்டுதான் இருந்தது.
இமெயிலைப் பத்திரப்படுத்த முடியாத ஹில்லரியின் கையிலா உங்கள் நாட்டைக் கொடுக்கப்போகிறீர்கள்?’ எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார் ட்ரம்ப். மக்களையும் மீடியாவையும் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் ஹில்லரி இமெயில் குறித்து பேசவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் அவர் தன்அசிரத்தையையும் தவறையும் ஒப்புக் கொள்ளவேண்டியிருந்தது.
அதற்காக மன்னிப்புக் கேட்கவும் வேண்டியிருந்தது. ட்ரம்ப்பின் அதிரடி அடாவடிப் பேச்சுக்கள், ஹில்லரியின் மிதவாதத்தைப் பரிதாபமூட்டும் வகையில் மூழ்கடித்தன. `ஹில்லரி ஓர் அமைதிப் புறாதான். ஆனால், அமெரிக்காவுக்குத் தேவை என்னைப் போன்ற ஒரு கழுகுதான்’ என்று மக்களை நம்பவைத்தார் ட்ரம்ப். `ஒபாமாவைப் போல் உலக அமைதி குறித்து எல்லாம் இனியும் பேசிக்கொண்டிருக்க முடியாது. அடித்து ஆடவேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று ட்ரம்ப் முழங்கிய ஒவ்வொரு முறையும் ஆரவாரமான கைதட்டல்கள் எழுந்தன.
இந்தக் கைதட்டல்களே வாக்குகளாக மாறியிருப்பதைப் பார்க்க முடிகிறது.ட்ரம்ப்புக்கும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால் என்ன தவறு? நீண்டகாலமாக இயங்கிவரும் ஹில்லரியோடு ஒப்பிடும்போது அரசியல், ராணுவம், ராஜதந்திரம், பொருளாதாரம் எதிலும் அவருக்குப் பரிச்சயம் இல்லை என்னும் உண்மையை சிலர் சுட்டிக்காட்டியபோது, அது அவருக்கு எதிராக அல்லாமல் சாதகமாகத் திரும்பிவிட்டது.
70 வயதான டொனால்ட் ட்ரம்ப் வகிக்க இருக்கும் முதல் அரசுப் பதவி, அதிபர். `ஆறு நபர்களையும் ட்விட்டரையும் நம்பி அரசியல் களத்தில் குதித்தவர்’ என ட்ரம்ப்பை சிலர் வர்ணிக்கிறார்கள். இது உண்மை அல்ல. பெரும் மில்லியனரும் ரியல்எஸ்டேட் சக்கரவர்த்தியாகவும் திகழும் ட்ரம்ப்பிடம் எல்லாவற்றையும்விட அதிகமாகப் பணம் குவிந்துகிடக்கிறது.
பொருளாதாரம் பயின்ற பிறகு 1968-ம் ஆண்டு தன் தந்தையின் பிசினஸில் இணைந்துகொண்டார் ட்ரம்ப். மூன்று ஆண்டுகளில் அதைத் தனதாக்கிக் கொண்டதோடு `ட்ரம்ப் ஆர்கனைசேஷன்’ என்று பெயரையும் மாற்றி அமைத்தார். முதலாளித்துவத்தை ஆதரித்த ரொனால்ட் ரீகனை, தொடக்கத்தில் ஆதரித்தார். 1999-ம் ஆண்டு ரீஃபார்ம் கட்சியில் சேர்ந்தார். 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை டெமாக்ரடிக் கட்சியல் இருந்துவிட்டு, பிறகு ரிபப்ளிகனாக மாறினார்.
2011-ம் ஆண்டு அதில் இருந்தும் வெளியே வந்தார். அடுத்த ஆண்டே மீண்டும் ரிபப்ளிகன் கட்சியில் சேர்ந்துகொண்டார். அவர் எழுதிய `ட்ரம்ப் : தி ஆர்ட் ஆஃப் தி டீல்’ என்னும் சுயமுன்னேற்றப் புத்தகம் நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லராக 13 வாரங்கள் இருந்திருக்கிறது. தன்னுடைய பிம்பத்தைத் திட்டமிட்டு வளர்த்துக்கொண்டார் ட்ரம்ப். தன் பலவீனங்கள் அனைத்தையும் பலமாக மாற்றிக் காட்டினார்.
அவர் ஓர் அறிவுஜீவி கிடையாது. ஒபாமா அல்லது ஹில்லரி போல் சமத்துவம், உலக நலன், அமைதி என உயர்ந்த லட்சியங்களை அவர் இதுவரை முன்வைத்தது இல்லை. `மனிதர்களின் நிறம் முக்கியம் அல்ல; குணம்தான் முக்கியம்’ என்று எல்லாம் மேடையில் முழங்கியதும் இல்லை. தன்னுடைய பொருளாதாரக் குற்றங்கள் முதல் பாலியல் குற்றங்கள் வரை அனைத்தும் வீதிக்கு வந்தபோதும் அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. முக்கியமாக, எதற்கும் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதும் இல்லை.
ட்ரம்ப்பின் வெற்றியை, சர்வதேச அளவில் பலம் பெற்றுவரும் வலதுசாரிச் சித்தாந்தத்தின் வெற்றியாகவும் பார்க்க முடியும்; உலகமயமாக்கலின் தோல்வியாகவும் பார்க்க முடியும். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய நிகழ்வோடு ட்ரம்ப்பின் வெற்றியையும் ஒப்பிடலாம். நீண்டகாலமாக ஐரோப்பிய யூனியனில் இருந்ததன் மூலம் நாம் சாதித்ததைவிட இழந்ததே மேல் என்று பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் கருதினார்கள்.
அதேபோல் நீண்டகால ஒபாமா ஆட்சி நமக்கு எதையும் தரவில்லை என்று அதிருப்தி கொண்டவர்களே ட்ரம்ப் பக்கம் திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்காக வாழ்ந்ததும் இழந்ததும் போதும், நாம் நமக்காக வாழ்ந்துகொள்வோம் என்னும் ஒருவகை சுயநலனின் வெற்றியும்தான் இது. இதை ட்ரம்ப் `தேசியவாதம்’ என அழைத்தார். பிரெக்ஸிட் ஆதரவாளர்களும் அதே பெயரைத்தான் பயன்படுத்தினார்கள்.
அடுத்து என்ன?
கையில் துளி அதிகாரமும் இல்லாதபோதே ட்ரம்ப் பாய்ந்து பாய்ந்து தன் எதிரிகளைத் தாக்கிக்கொண்டிருந்தார். அதிகபட்ச அதிகாரம் கையில் குவிந்துவிட்ட நிலையில் இனி அவர் என்னென்ன செய்வார் என்பதே பலருடைய கேள்வியாகவும் கவலையாகவும் இருக்கின்றன.
கீழ் அவையும் (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேட்டிவ்ஸ்), மேல் அவையில் (செனட்) பெரும் அளவும் இப்போது ட்ரம்ப்பின் கரங்களில். இந்த அளவு பலம் ஒபாமாவுக்குக்கூட இதுவரை கிடைத்தது இல்லை. இதன் பொருள் ட்ரம்ப்பால் எந்த உயரத்துக்கும் பாய முடியும், தான் அடித்துவிட்ட எல்லா சவடால்களையும் நிஜமாக்க முடியும் என்பதுதான்.
இனி அவர் எடுக்கும் எந்த முடிவையும் அமெரிக்கச் சட்டமன்றத்தால் தடுக்க முடியாது. நிஜமாகவே மெக்ஸிகோ எல்லையில் இப்போது அவரால் சுவர் எழுப்ப முடியும். இஸ்லாமியர்களை தன் நாட்டுக்குள் வரவிடாமல் தடுக்க முடியும் அல்லது தீவிரமான கண்காணிப்புக்குள் அவர்களை வைத்திருக்க முடியும்.
இந்தியர்களும் இன்னபிற ஆசியர்களும் வந்து பணிபுரிவதற்கு ஏற்ற விசாவை அளிக்க வேண்டுமா… வேண்டாமா என்பது இனி அவர் முடிவு. தகுந்த ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் பணியாற்றும் 11 லட்சம் பேரை ட்ரம்ப்பால் இப்போது திருப்பி அனுப்ப முடியும்.
அகதிகளை `இனி வேண்டாம்’ எனத் தடுக்க முடியும். அமெரிக்கா மட்டும் அல்ல, உலகமும் அவரைக் கண்டு அஞ்சியாக வேண்டும். தன்னுடைய பேட்டிகளில் ட்ரம்ப் பலமுறை வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்.
‘அணு ஆயுதத்தை வெறுமனே வைத்திருப்பதில் என்ன பயன்? அதை உபயோகிக்க வேண்டாமா?’ அமெரிக்காவை, நேசித்திருக்கிறோம்; பலமுறை வெறுத்திருக்கிறோம்; கண்டு அஞ்சியிருக்கிறோம்.
அவரவர் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப மிதமாகவோ, தீவிரமாகவோ அந்த நாட்டை எதிர்த்தும் வந்திருக்கிறோம். முதல்முறையாக அந்த நாட்டைக் கண்டு இப்போது பரிதாபப்படப் போகிறோம்!