இலங்கையை உலுக்கிய தொடர் தற்கொலை தாக்குதலின் பதற்றம் இன்னும் நாட்டை விட்டு நீங்கவில்லை. இப்படியொரு கொடூர தாக்குதல் நடக்குமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மனித குலத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தாக்குதலை, மதத்தின் பெயரால் சிறிய குழுவொன்று நடத்தி முடித்துள்ளது.
இந்த கொடூரத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நிலைகுலைந்துள்ளது. அவர்கள் இந்த தாக்குதலை செய்யவில்லை. தாக்குதலை ஆதரிக்கவில்லை. இந்த குழுவை வளர்க்கவில்லை. தலைமறைவாக இருந்த குழு, இன்று நாட்டிற்கே பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டை உலுக்கிய ஆறு தற்கொலை தாக்குதல்களையும் நடத்தியவர்கள் யார், அதை எப்படி நடத்தினார்கள், இதன் பின்னணி என்ன என்பதை லேட்டஸ்ட் விசாரணை தகவல்களுடன் தமிழ்பக்கம் தருகிறது.
நீர்கொழும்பு சென்.செபஸ்ரியன் தேவாலய தாக்குதல்
நீர்கொழும்பு கட்டுவபிட்டிய சென்.செபஸ்ரியன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவரின் பெயர் அபு ஹாசில் என ஐ.எஸ் அமைப்பு அறிவித்திருந்தது. அந்த பெயர் ஐ.எஸ் அமைப்பில் வைக்கப்பட்ட பெயர், அவரது உண்மையான பெயர் மொஹமட் கஸ்தூன் என்பது தெரிய வந்துள்ளது.
அவர் தொடர்பான விசாரணைகளை முடுக்கி விட்ட பொலிசார், அவர் மன்னாரை பிறப்பிடமாக கொண்டவர் என்ற தகவலை பெற்றுள்ளனர். க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பாடத்தை கற்ற இவர், பின்னர் துருக்கியில் கல்வி கற்க சென்றார்.
இவரது மனைவி குருநாகலின் கெகுணுகொல்ல கிராமத்தை சேர்ந்தவர். அந்த பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற அவர் இப்பொழுது தலைமறைவாக உள்ளார்.
மொஹமட் கஸ்தூன் தகவல் தொழில்நுட்பத்துறையில் வல்லுனராக இருந்துள்ளார்.
கட்டுவபிட்டிய சென்.செபஸ்ரியன் தேவாலய தாக்குதலிற்காக இவர் கட்டான டேவிட் வீதியில் தங்கியிருந்து தயார்ப்படுத்தலில் ஈடுபட்டுள்ளார். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு பெண். தனிமையில் வாழ்ந்து வருகிறார். அவரது மகன், மகள் வெளிநாட்டில் உள்ளனர். புறக்கோட்டையில் ஒரு காலணியக உரிமையாளராகவே தன்னை அவர் அடையாளப்படுத்தியிருந்தார்.
மொஹமட் ஆசம் மொஹமட் முபாரக் என்பவர் கொழும்பு 12 யோர்க் வீதியில் வசிப்பவர். சங்கரில்லா ஹோட்டலில், சஹ்ரானுடன் தற்கொலை தாக்குதல் நடத்திய இரண்டாவது நபர் இவர்தான். தாக்குதலாளிகளிற்கான தங்குமிடங்களை ஏற்பாடு செய்து கொடுப்பதில் பங்காற்றினார்.
கட்டான வீட்டை வாடகைக்கு பெற்றபோது, வர்த்தக நிலையத்தில் பணியாற்றுபவர்களும் அங்கு தங்குவார்கள் என கூறப்பட்டிருந்தது. இதன்படி 3 ஆண்கள், 3 பெண்கள், 2 சிறுவர்கள் வீட்டில் தங்கினர்.
நீர்கொழும்பு தேவாலயத்தில் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு அந்த வீட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக புலனாய்வு வட்டாரங்கள் நம்புகின்றன. வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மின்கலங்கள், கம்பிகள், வயர், இலத்திரனியல் சேர்க்கிற் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
18ம் திகதி வீட்டிலிருந்து அனைவரும் வெளியேறியுள்ளனர். தாக்குதலாளிகள் மட்டும் 21ம் திகதி மீண்டும் அங்கு வந்து, குண்டை எடுத்துள்ளனர். தேவாலயத்தில் இருந்து அந்த வீடு 2 கிலோமீற்றர்கள் தொலைவில் இருந்தது.
தாஹ் சமுத்திரா ஹோட்டல் தாக்குதல் முயற்சி
தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தற்கொலை குண்டை வெடிக்க வைக்க முயன்று அது முடியாமல் போக, தெஹிவளைக்கு தப்பி வந்து குண்டை பரிசோதித்தபோது அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்பவர் உயிரிழந்தார். இவர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் அமைப்பிடம் நேரடியாக பயிற்சி பெற்றவர் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர். இவரது தந்தையார் கம்பொலவில் பெரிய தேயிலை தொழிற்சாலையை நிர்வகித்தார். அவரது மனைவி வெல்லம்பிட்டிய சர்வதேச பாடசாலையில் ஆசிரியையாக இருந்தார். இவருக்கு நான்கு குழந்தைகள். கடைசி குழந்தை 7 மாத வயதுடையது.
ஜமீல் தொடர்பாக தகவல்களை தமிழ்பக்கம் ஏறடகனவே வெளியிட்டிருந்தது. அதை படிக்க இங்கு அழுத்துங்கள்.
முதல்நாள் இரவு ஹோட்டல் அறையை முஹமட் முபாரக் என்ற பெயரில் பதிவு செய்திருந்தார். அன்றிரவு ஹோட்டலில் தங்கியவர், மறுநாள் காலை 8.22 மணிக்கு ஹோட்டலுக்குள் பல முறை குண்டை வெடிக்க வைக்க முயன்றார். அது முடியாமல் போனதும் தொலைபேசியில் பேசியபடி வெளியேறி, முச்சக்கர வண்டியில் தெஹிவளை புறநகர் பகுதியில் உள்ள வாடகை அறைக்கு திரும்பினார். அங்கிருந்து மீண்டும் வணக்கஸ்தலம் ஒன்றை குறிவைத்து சென்றவர், பாதுகாப்பு படையினர் வீதிக்கு இறங்கியதால் செயற்படுத்த முடியாமல் விடுதிக்கு திரும்பினார். தனது அறைக்கு பக்கத்தில் தங்கியிருந்த இளம் ஜோடியொன்றை தாக்குதல் நடத்தி கொன்றார். தானும் உயிரிழந்தார்.
21ம் திகதி காலையில், தனது மனைவிக்கு “கடவுளிடம் செல்கிறோம்“ என்ற குரல் வழி செய்தியை அனுப்பியது விசாரணைகளில் தெரிய வந்தது.
அவரது மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், மனைவியை தொலைக்காட்சி பார்க்கவோ, சமூக ஊடகங்கள் பாவிக்கவோ அவர் அனுமதிக்கவில்லையென்பது தெரிய வந்தது.
தனது கணவர் மதரீதியான ஆழமான ஈடுபாட்டுடன் இருந்தாலும், இவ்வளவு தூரம் செல்வார் என எதிர்பார்க்கவில்லையென மனைவி தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்னர், கண்டியில் உள்ள ஜமீலின் பெற்றோர் வீட்டுக்கு விடுமுறையை கழிக்க சென்றதாகவும், அப்போதும் நகைச்சுவையாக பொழுதை கழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை தேவாலய தாக்குதலும் வெடிக்கத் தவறிய நேரக்கணிப்பு குண்டும்
கொச்சிக்கடை தாக்குதலை மேற்கொண்டவர் அபு ஹாசிம் என ஐ.எஸ் அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட மொஹமட் தாவூத். மட்டக்குளியவை சேர்ந்த 22 வயதானவர். இவரது தந்தை இலங்கைக்கு பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்யும் மிகப்பெரும் செல்வந்தர். சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்ற இவர், தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் சட்டம் பயின்று வந்தார். இலங்கை, இந்தியா, அரபு எம்டேட்ஸ் ஆகிய நாடுகளில் சட்டத் தொழில் செய்பவராக இருக்க வேண்டுமென்பதே அவரது கனவாக இருந்தது.
தாவூத்தும் திருமணமானவர். அவரது மனைவி கல்முனையில் வசித்தார். அவர் தற்போது கர்ப்பவதியாக உள்ளார். தாவூத் தற்கொலை தாக்குதலிற்கு முன்னதாக 18ம் திகதி கல்முனையிலிருந்து புறப்பட்டு விட்டார். எனினும், கொழும்பிலுள்ள பெற்றோருக்கு, கல்முனையில் இருப்பதாகவே சொல்லிக் கொண்டிருந்தார். அவர் 19ம் திகதி கொழும்பு வந்திருந்தார். தாக்குதல் நாளான 21ம் திகதி வரை அவர் எங்கு வாழ்ந்தார் என்பது மர்மமாக உள்ளது. கல்கிசை மவுண்டலவனியாவிற்கு அருகிலுள்ள சொகுசு தொடர்மாடி அல்லது பாணந்துறை பகுதியில் மறைந்திருந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. குண்டுகள் தொடர்பான பயிற்சியையும் அவர் பெற்றிருக்கலாமென்ற ஊகமும் உள்ளது. விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், இது குறித்து பின்னர் வெளிப்படுமென எதிர்பார்க்கலாம்.
கொச்சிக்கடை சென்.அன்ரனீஸ் தேவாலய தாக்குதலிற்காக PJ 4080 என்ற இலக்கமுடைய சிறிய வாகனத்தில் அவர் வந்தார். இந்த வாகனத்தின் உரிமையாளர், சினமன் கார்டன் ஹோட்டல் மனித வெடிகுண்டு முபாரக். கொழும்பு துறைமுக வளாக சுவரோர நடைபாதையோரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு, 15 கிலோ எடையுள்ள குண்டுப்பையை சுமந்து கொண்டு தேவாலயத்திற்கு சென்றார்.
தாவூத்தின் திட்டப்படி- இரண்டு குண்டுகள் வெடிக்கவிருந்தன. முதலாவது, தேவாலயத்திற்குள் தாவூத் மனித வெடிகுண்டாக வெடிப்பது. மற்றையது, அரை வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த அரை தானியங்கி நேரக்கணிப்பு குண்டு. தேவாலயத்திற்குள் தாவூத் வெடித்து சிதறிய பின்னர், ஒரு மணித்தியாலம் கழித்து வெடிக்கும் விதமாக வைக்கப்பட்டது.
பல குண்டுகளை இப்படி வைத்தால், தாக்குதலாளிகள் பலர் இருப்பதை போன்ற பீதியை உருவாக்கலாம், முதலாவது குண்டு வெடித்ததை தொடர்ந்து பரபரப்பாக பலர் குவிந்திருப்பதால் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தலாம் என்பதே தாக்குதலாளிகளின் திட்டம்.
எனினும், அந்த குண்டு வெடிக்கவில்லை. இதனால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
குண்டு வெடித்த பின்னரும் அந்த வாகனம் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. குண்டுதாரி எப்படி வந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. எனினும், 22ம் திகதி தேவாலய நிர்வாகம் சிசிரிவி கமரா காட்சிகளை கவனித்து, அந்த வாகனத்தில் சந்தேகமடைந்தது. உடனடியாக பொலிசாருக்கு அறிவித்த பின்னர், அந்த வாகனத்தின் மீது கவனம் திரும்பியது. அந்த வாகனத்தின் அருகாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் பயணித்திருந்தார்.
பொலிஸ், அதிரடிப்படை, குண்டுசெயலிழக்க வைக்கும் பிரிவினர் பரிசோதித்த போது சூட்சுமமான முறையில், காஸ் சிலிண்டர்களை இணைத்து அந்த குண்டு உருவாக்கப்பட்டிருந்ததை அவதானித்தனர். அதை பாதுகாப்பாக அகற்றுவதில் உள்ள சிக்கலை புரிந்து, 22ம் திகதி மாலையில் அதை வெடிக்க வைத்தனர். இந்த சம்பவத்தின் பின்னரே, மனித வெடிகுண்டே அந்த வாகனத்தை செலுத்தி வந்தது தெரிய வந்தது.
வாகனம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து புலன் விசாரணையில் துரித முன்னேற்றம் இருந்தது. சிசிரிவி கமராக்களை ஆய்வு செய்ததில், 21ம் திகதி பாணந்துறை சரிக்கமுல்லவில் இருந்து வாகனம் வந்தது தெரிய வந்தது. பாணந்துறை வீட்டிலேயே, வாகனத்தில் குண்டு பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
சிஐடி விசாரணையில் இன்னொரு முக்கிய தகவல் கிடைத்தது. அது கல்கிசை, மவுண்ட்லவனியாவில் உள்ள இன்னொரு மறைவிடம். சொகுசு தொடர்மாடியின் மேல்மாடியை முபாரக்கின் பெயரில் வாடகைக்கு பெற்றிருந்தனர். அங்குதான் சஹ்ரான் தங்கியிருந்து, குண்டை தயார்படுத்தியதாக கருதப்படுகிறது.
20ம் திகதி அந்த தொடர்மாடிக் குடியிருப்பிற்கு குறிப்பிட்ட வாகனம் வந்துள்ளது. முபாரக்கே வாகனத்தை செலுத்தியிருந்தார்.
இந்த வீட்டிலேயே, ஐ.எஸ் வெளியிட்ட வீடியோ பதிவுசெய்யப்பட்டதா என்ற சந்தேகமும் விசாரணையாளர்களிடம் உள்ளது.
அடுத்த பகுதி இன்றிரவு பதிவேற்றப்படும்….