வில்பத்து அழிக்கப்பட்டபோது, யாரும் அதனை பெரிதுபடுத்தவில்லை. இன்று பயங்கரவாதிகள் அந்த காட்டுக்குள் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். சில அரசியல்வாதிகளால் வழங்கப்பட்ட அரச நியமனங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை என்ற சிறிய தீவில் 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்து கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பி வரும் நிலையில் உலக பயங்கரவாத்தின் பார்வை இலங்கையை ஆட்கொண்டுள்ளமை ஏற்றுக்கெள்ள முடியாதது.
அமைதியும் சமாதானமும் வேண்டி ஆன்ம ஒருநிலைக்காக ஆலயங்களை மக்கள் நாடும் நிலையில் கிறிஸ்தவர்களின் விசேட தினத்தில் அவர்களை பயங்கரவாதிகள் இலக்கு வைத்தமையினூடாக அவர்களது மதவெறியினை வெளிப்படுத்தியுள்ளது.
உலக பயங்கரவாதிகளுக்கு பலம் சேர்க்கும் முகமாக சில அடிப்படைவாத இஸ்லாமியர்கள் துணைபோயிருப்பதானது ஒட்டுமொத்த இஸ்லலாமியர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள நிலையில் பயங்கரவாத்தை விரும்பாத இஸ்லாமியர்களின் பாதுகாப்பையும் நாட்டு மக்கள் அனைவரது பாதுகாப்பையும் இவ்வேளையில் உறுதிப்படுத்துவது அரசினது கடமையாகும்.
பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள அரசியல் போட்டியின் விளைவாக புலனாய்வு தகவல்களை கூட அரசியலாக பார்க்கப்பட்டமையின் விளைவே நூற்றுககணககான மனித உயிர்களை பறித்துள்ளது. அரசியல் போட்டிக்காக நாட்டு மக்களையே பலிக்கடாவாக்க துணிவதானது இவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைத்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கும் அதிகமான நாட்களுக்கு முன்னர் தேசிய புலனாய்வு பிரிவு, அமெரிக்க புலனாய்வு பிரிவு மற்றும் இந்தியா புலனாய்வு பிரிவுகள் இலங்கை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த புலனாய்வு அறிக்கைகளை உதாசீனம் செய்யப்பட்டதன் உண்மை தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் ஜனாதிபதியாவோ, பிரதமராவோ எவராக இருந்தாலும் பதிவியை துறப்பதற்கும் தயாராக வேண்டும்.
இதற்குமப்பால் இன்று சில அரசியல்வாதிகள் முதலைக்கண்ணீர் வடிப்பது வேதனையளிக்கின்றது. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டில் சில அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். இலங்கையின் முக்கிய வளங்களான வில்பத்து காட்டுப்பகுதி அழிக்கப்படுகின்றபோது அதனை தடுக்குமாறு பல குரல்கள் ஓங்கி ஒலித்தபோது அதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டுகொள்ளாத நிலை காணப்பட்டது.
இன்று அப்பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில் வில்பத்து பகுதியில் ஏன் முன்னரே கண்காணிப்பை மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழச்செய்கின்றது.
அது மாத்திரமின்றி சில அரசியல்வாதிகளால் துறைமுகங்கள் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்களிலும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இவை தொடர்பிலும் புலனாய்வாளர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலை உள்ளதையும் இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இச் சூழலில் இன்று விடுதலைப்புலிகள் பின்னால் முழு தமிழ் மக்களும் செல்ல காரணம் அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடே என தெரிவித்துள்ள அரசியல்வாதியொருவர் தன்னையும் விடுதலைப்புலிகளின் தலைவர் நிலையில் ஒப்பிட்டு பார்க்க ஆசைகொண்டுள்ளார்.
எனவே இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க அனைவரும் ஒன்றிணையாது விட்டால் இதனை தடுக்கமுடியாது என்பதனை கருத்தில் கொண்டு அரசியல் வேறுபாட்டை துறந்து நாட்டுமக்களின் நல்வாழ்வுக்கு அனைவரும் செயற்பட முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.