உயிர் பறித்த ஞாயிறு நேற்றுடன் ஒருவார காலத்தை நிறைவு செய்துள்ளது. அதனிடையே இடம்பெற்ற சம்பவங்களுள் சாய்ந்தமருதுச் சம்பவம் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு உரிமை கொண்டாடிய அதே ஐ.எஸ். அமைப்புத்தான்தான் கல்முனைச் சம்பவத்திற்கும் உரிமை கோரியுள்ளது.
கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பூரணமாக முஸ்லிம் மக்களைக் கொண்ட பிரதேசமாகும். சுனாமியில் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருதுக் கிராம கரையோர மக்களுக்கு குடியேற்றக் கிராமமாக வொலிவேரியன் என்ற கிராமம் மேற்கேயுள்ள வயல் பகுதியில் உருவாக்கப்பட்டது.
சாய்ந்தமருதிலிருந்து மேற்கே ஒரு தனியான பிரதேசம் அது. அந்தக் கிராமத்தில் சுமார் 200 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அங்கு மைதானங்கள், இஸ்லாமியக் கற்கை நிலையம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன உள்ளன.
அங்கு குறித்த ஐ.எஸ். அமைப்பினர் எவ்வாறு வந்தார்கள் என்பது தொடர்பில் ஊடகங்களில் பல தகவல்கள் வெளிவந்தன.
எவ்வாறு குழுவினர் வந்தனர் ?
பிரதான குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹ்ரானின் சாரதி காத்தான்குடியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியவந்தது. அதனடிப்படையில் சம்மாந்துறையில் செந்நெல் கிராமம் என்ற இடத்தில் இனந்தெரியாதோரின் பதுங்குமிடம் இருப்பதாகப் பொலிஸாருக்கு தகவல் கசிந்தது.
சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அப்பிரதேசத்தை உடனே பொலிஸார், இராணுவம் அதிரடிப் படையினர் ஆகியோர் முற்றுகையிட்டனர். வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இத்தேடுதலில் தற்கொலை அங்கி உள்ளிட்ட பலபொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் 7பேரும் சந்தேகத்தில் கைதானார்கள்.
அவர்கள் வழங்கிய தகவலையடுத்து நிந்தவூரின் பக்கம் முப்படையினர் பார்வை திரும்பியது. இதுவும் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்டது. அங்கு வந்துசென்ற படி ரக வாகனம்(சிறிய ரக வேன்) மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியதும் அங்கும் பல வெடிக்க வைக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் படி வாகனம் தப்பியது.
அவ்வாகனம் நேராக குறித்த சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தினுள் நுழைந்துள்ளது. சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய 3 இடங்களிலும் குறித்த 3வீடுகளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா முற்பணமும் 5 ஆயிரம் ரூபா மாதாந்த வாடகையும் தருவதாக காத்தான்குடியைச் சேர்ந்த மொகமட் நியாஸ் (1982 இல் பிறந்தவர்) என்பவரின் பெயரில் வாடகைக்குப்பெறப்பட்டிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
தகவல் வெளியே வந்தது எப்படி?
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம வீட் டில் 5 பேர் தங்குவதாக ஏலவே கூறப்பட்டதாம். ஆனால் சம்பவ தினம் சுமார் 19பேர் அளவில் மாலை நேரத்தில் வந்திறங்கியது அங்கிருந்த வீட்டுரிமையாளருக்கும் ஏனைய குடியிருப்பு மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த விடயத்தை அவர்கள் அங்குள்ள பள்ளிவாசலுக்கு அறிவித்தனர். பள்ளிவாசல் நிர்வாகிகள் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தருக்கும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக வந்து விசாரித்த வேளை வந்த குழுவினர் சற்று காரசாரமாக மறுதலித்து விவாதித்ததும் அவர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள் திரும்பும் வழியில் வழமையாக பிரதான வீதியில் நிற்கும் பண்டாரவளையைச் சேர்ந்த அனைவரிடமும் நன்றாகப் பழகி வரும் போக்குவரத்துப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அவர் அங்கு சென்ற வேளை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மயிரிழையில் தப்பி சிராய்ப்புக் காயங்களுடன் அருகிலுள்ள கால்வாய்க்குள் தப்பி வந்து பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் தகவல் வழங்கினார்.
அதன்பின்னர் தீவிரவாதிகள் வெளியே வந்து 5000 ரூபா காசுத்தாளை வீசியெறிந்து ‘அடே காட்டிக் கொடுத்தவனுகளே இந்தக் காசைச் சப்புங்கடா! உங்களுக்காகத்தான் சாகிறோம் ‘ என்று கத்தியதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்தே சாய்ந்தமருது தாக்குதல் ஆரம்பமாகியது.
அந்தக் கணம்!
அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டு அப்பிரதேச மக்கள் ஒன்றுகூடத் தொடங்கினார்கள். அதன்பின்பு மக்களை கலைப்பதற்காக எடுத்த எந்த முயற்சியும் கைகூடாத நிலையிலும் அங்கிருந்து தங்களது வாகனத்தில் தப்பிச் செல்ல முடியாத நிலையும் ஆயுததாரிகளுக்கு ஏற்பட்டது.
பின்பு ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று கூறிக் கொண்டு வானத்தை நோக்கி ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். துப்பாக்கி சத்தத்தினால் ஊர் முழுவதும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் குழம்பிய நிலையில் பதற்றத்துடனும் அச்சத்துடனும் காணப்பட்டார்கள்.
அதேநேரம் இராணுவத்தினர்கள் வருகைதந்ததுடன் கரைவாகு பிரதேசத்தை சுற்றிவளைத்தார்கள். அப்போது ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள மக்கள் அங்குமிங்குமாக தப்பி ஓடத் தொடங்கினார்கள்.
அப்போது ஓர் முச்சக்கர வண்டியில் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓர் குடும்பத்தினர் அவ்விடத்திலிருந்து பதற்றத்துடன் வெளியேற முற்பட்ட போது இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகளுக்கு இலக்காகி மனைவி (பாத்திமா அஸ்ரிபா வயது 21) இறந்ததுடன் முச்சக்கர வண்டி செலுத்தி வந்த கணவர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதல் தொடர்ந்தது!
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தாக்குதல் வேட்டை ஆரம்பமாகியது. இரவு வேளையாதலால் இக்குண்டுவெடிப்புச்சத்தங்களும் துப்பாக்கிவேட்டுச் சத்தமும் நீண்ட தூரத்திற்கு கேட்டது. என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு அக்கணம் தெரியவில்லை. இரு ஆயுததாரிகளும் ஒரு பெண் சிவிலியனும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மாத்திரமே அப்போது ஊடகங்களில் சொல்லப்பட்டது.
இந்த நேரத்தில் ஆயுததாரிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் குண்டு ஒன்று வெடித்தது. பின்பு சிறிது நேரத்தில் இன்னுமொரு குண்டு வெடித்தது. இந்த சந்தர்ப்பத்தில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. இது பல மணி நேரமாக நீடித்தது.
இராணுவத்தினர்களால் தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம் என்பதனை அறிந்ததும் வீட்டுக்குள் இருந்த ஆயுததாரிகள் முகநூல் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்தவாறு தங்களை காபிர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள் என்று கூறிக் கொண்டு தக்பீர் முழக்கத்துடன் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக அறியப்படுகின்றது.
ஆயுததாரிகளிடம் இராணுவத்தினரை எதிர்த்து சண்டை செய்வதற்காக ஒரேயொரு T56 ரக துப்பாக்கி மட்டுமே இருந்துள்ளதாகவும் மற்றவைகள் குண்டுகளும் அதனை தயாரிக்கும் உபகரணங்களும் என்றே அறிய முடிகின்றது.
இந்த தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆயுததாரிகளைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டார்கள். அதில் அவர்களது குழந்தைகளும் பெண்களும் அடங்கும். இராணுவத்தினர்களை எதிர்த்து சண்டைசெய்த ஆயுததாரிகளில் ஒருவர் துப்பாக்கியுடன் இறந்து கிடந்தார்.
இவர் தற்கொலை செய்ததாக தெரியவில்லை. இவரின் தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் அவரது உடல் காணப்பட்டது. வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் கிடந்தன.
வீட்டுக்குள் எத்தனை பேர் உள்ளார்கள் என்ன நிலையில் உள்ளார்கள் என்று தெரியாத நிலையில் இராணுவத்தினர்கள் முன்னெச்சரிக்கையுடன் மிகவும் தாமதித்தே அவ்வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். அதுவரைக்கும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட படியே முன்னேறினார்கள்.
துப்பாக்கிதாரிகள் தப்பிக்க நினைத்தால் மக்களை கொலை செய்து விட்டு தப்பித்திருக்கலாம். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யாது தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சம்பவத்தை நேரில் கண்ட அப்பிரதேசவாசி தெரிவித்தார்.
இதன்போது குறித்த பயங்கரவாதியின் தாக்குதலில் இருந்து தப்பிய குழந்தையை இராணுவத்தினர் மீட்டு காப்பாற்றி யிருந்தனர்.
தன்னையும் குண்டு வைத்து கொல்ல முயன்றது தனது தந்தை என்பதை அறியாத அந்த பிஞ்சுக் குழந்தை எரிகாயங்களுடன் தனது தந்தையை அழைக்கும் காட்சி பலரின் உள்ளத்தை ஒரு கணம் உறையச் செய்ததுடன் தாயாக தந்தையாக குறித்த குழந்தையை அரவணைத்து ஆறுதல்படுத்தி காப்பாற்றிய இராணுவ வீரரின் மனிதநேயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சம்பவத்தில் பொதுமக்கள் சிலரும் காயமடைந்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி மோதல் பதிவாகி இருந்த கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று காவற்றுறை ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
6 ஆண்களும் 3 பெண்களும் 6 சிறார்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவித்த அவர் பரவிவரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பாடசாலையில் தஞ்சம்
சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதலால் அகதிகளாக பொலிவேரியன் கிராமத்தில் சுமார் 1400 பொதுமக்கள் சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களுக்குரிய பகல் உணவை சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் பொதுமக்கள் மூலம் ஏற்பாடு செய்திருந்ததாகவும் மேலும் அவர்களுக்கு உதவும் பொருட்டு பிஸ்கட், கேக், தண்ணீர் போத்தல், குளிர்பானங்கள், சிறுவர்களுக்கான உணவுகளை சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் மாளிகைக்காடு சாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசல் என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், கல்முனை மாநகர மேயர் றக்கீப் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஸ்தலத்திற்கு விரைந்தனர். ஊடகவியலாளர்களும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் பாடசாலையில் தங்கியிருந்த மக்களை கண்டு ஆறுதல் தெரிவித்தனர். அங்கிருந்த இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி அனுரவிடம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்:
தீவிரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் முஸ்லிம்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் தான் தீவிரவாதிகள் சம்பந்தமான தகவல்களை வழங்கி அவர்களை பிடித்துக் கொடுப்பதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர் .
சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவமானது வெளிநபர்கள் இங்கு வந்து வீடுகளை வாடகைக்கு எடுத்து இங்கு இருந்துள்ள பொழுது இங்குள்ள மக்கள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் சுற்றி வளைத்த போதே இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக தற்பொழுது பாதுகாப்பு படையினர் இங்கு அமையப் பெற்றுள்ள வீடுகளை சோதனையிட்டு இவ்வாறான சம்பவத்திற்கு பொறுப்பான சூத்திரதாரிகள் பதுங்கி இருக்கின்றனரா? எனவும் தேடுதல் நடாத்தியிருந்தனர்.
குறித்த இடத்தில் வசித்துவந்த பொதுமக்கள் பாடசாலைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான விடயங்கள் பல அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய பொலிஸ் உயர் அதிகாரிகள் இச்சோதனை முடிந்த பிற்பாடு அவரவர் வீடுகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர்.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் பொறுப்பும் அரசுக்கும் படையினருக்கும் இருக்கின்றது என்பதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என அவர் இதன் போது தெரிவித்தார்.
வீடுகள் படையினரால் சோதனையிடப்பட்டபின்பு நேற்று முன்தினம் (27) சனிக்கிழமை மாலை 7.00 மணியளவில் வீடு செல்லஅனுமதிக்கப்பட்டதாயினும் அவர்கள் அச்சம் காரணமாக நேற்றே வீடுகளுக்குச் சென்றனர் என்று கூறப்படுகிறது.
ஊரடங்குச் சட்டம் ஒன்றரை நாட்களின் பின்பு நேற்று 10 மணியளவில் விலக்கிக் கொள்ளப்பட்டது.எனினும் மாலை 5 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வந்தது.
தற்போது படிப்படியாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருப்பினும் அச்சம் பீதி அவர்களை விட்டு இன்னும் நீங்கவில்லையென்பதே உண்மை.