குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை கண்டுபிடித்து, அவர்களை ஊக்குவித்தால் பிற்காலத்தில் சாதனையாளராக உருவாக வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு தந்தையின் ஊக்குவிப்பால், மதுரையைச் சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தீபக் ராம்ஜி(11) தற்போது டிரம்ஸ் வாசிப்பில், அனைவரையும் வியக்க வைக்கிறார். குறுகிய காலத்தில் 78 மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
ராம்ஜிக்கு, தமிழக கலை பண்பாட்டுத் துறை இந்த ஆண்டுக்கான ‘கலை இளமணி’ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதுபோல பல விருதுகளை பெற்றுள்ள ராம்ஜி, 7 வயதாக இருந்தபோது டிவி-யில் டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சியைப் பார்த்து டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கினார். சமீபத்தில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த ‘சங்கம்-4’ நிகழ்ச்சிக்கு வந்த டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து, அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து டிரம்ஸ் வாசித்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். சிவமணியும், ‘என்னைவிட பெரிய ஆளாக வருவாய்’ என பாராட்டினார். சில வாரங்களுக்கு முன், பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும் ராம்ஜியை அழைத்து வாழ்த்தி உள்ளார்.
ராம்ஜியின் தந்தை ராமமூர்த்தி, மின் வாரியத்தில் பணியாற்றுகிறார். ராம்ஜியின் ஆர்வத்தை குழந்தைப் பருவத்திலேயே அறிந்த அவரது தந்தை, உடனடியாக மதுரையில் ஒரு டிரம்ஸ் மாஸ்டரிடம் சேர்த்துவிட்டுள்ளார். டிரம்ஸ் வாசிப்பில் மொத்தம் 8 கிரேடுகள் உள்ளன. இந்த 8 கிரேடுகளை முடித்துள்ள ராம்ஜி, தற்போது டிரம்ஸ் இசைக் கருவி வாசிப்பில் குட்டி சிவமணியாக வலம் வருகிறார்.
இதுகுறித்து ராம்ஜி கூறும்போது, “டிவியில் கேட்கும் பாடல்களுக்கு ஏற்ப தாளம் போடுவது ரொம்பப் பிடிக்கும். அப்படித்தான் டிரம்ஸ் வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இசை அமைப்பாளராக வேண்டும் என்பதுதான் ஆசை. உலகம் முழுவதும் சென்று டிரம்ஸ் வாசிக்க வேண்டும். அதற்காக இப்போது மிருதங்கம், தப்பாட்டம் (பறை) உள்ளிட்ட கருவிகளை வாசிக்கக் கற்று வருகிறேன். எல்லா இசையமைப்பாளர்களிடமும் அவர்கள் இசை அமைப்பில் டிரம்ஸ் வாசிக்க வேண்டும். டிரம்ஸ் சிவமணி மாஸ்டர், கையொப்பமிட்ட அமெரிக்காவில் வெளியிட்டப்பட்ட புகழ்பெற்ற ‘ஜில்ஜியான் கம்பெனி’ ஸ்டிக்கை, அவரே எனக்கு பரிசாக வழங்கியது மறக்க முடியாதது” என்றார்.