தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர்.
சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்டியால் (பாரை) குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் வீதியால் சென்ற பாலாவியைச் சேர்ந்த யே.திலிசாந் (வயது-25), பாலாவி வடக்கைச் சேர்ந்த சோ.கணேசமூர்த்தி (வயது-39), தம்பிராஜா யோகராஜா (வயது -46), த. கவிதரன், நடராஜா வளர்மதி (வயது-52), செல்வராஜா குமார் (வயது-35) மற்றும் வைரமுத்து தவசீலன் (வயது-39) ஆகியோர் வாள் வெட்டு மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் ந.வளர்மதி, செ.குமார் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பேலிப் பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் இது மூன்றாவது வாள்வெட்டுச் சம்பவமாகும்.
கடந்த திங்கட்கிழமை மாலையும் கெற்பேலியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டில் இருந்த பெறுமதியான பொருள்களை அடித்து நொருக்கி சேதமாக்கியமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்