கடந்த கால கொள்ளையர்களின் ஆட்சியை மறந்து விட்டீர்களா? சிறையில் இருக்க வேண்டிய நீங்கள் எல்லாம் தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்றீர்கள், என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆவேசமாக கூறினார்.
வரவு செலவு திட்ட விவாதத்திற்காக இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மகிந்த ஆதரவாளர்கள் சபையை குழப்பும் வகையில் இடைக்கிடை கோஷமிட்டனர்.
அவற்றினை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் அகில விராஜ் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் மகிந்த ஆட்சியில் இடம் பெற்ற ஊழல்களை மறந்து விட்டீர்களா? கோடி கோடியாக கொள்ளையிட்ட பணத்திற்கு என்ன நடந்தது? அப்போது மகிந்தவின் பின்னால் சென்றவர்கள் இப்போது ஆட்சிக்கு எதிராக செயற்படுகின்றார்கள்.
மகிந்தவின் ஆட்சியின் போது திருடர்களாகவும், ஊழல்வாதிகளாகவும் இருந்தவர்கள், வரவு செலவு திட்டத்தைப் பற்றி மக்கள் மத்தியில் பொய்யாக கருத்துகளைப் பரப்பி வருகின்றார்கள்.
அதனை வைத்துக் கொண்டு ஆட்சியை கவிழ்க்க முடியும் என நீங்கள் கனவு காண்கின்றீர்கள். உங்களது ஆட்சியை கவிழ்க்கும் கனவு இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் நிறைவேறாது, என்பதனை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நல்லாட்சி உங்களுக்கு அதிக கருணைகாட்டி வருகின்றது, அதனாலேயே சுதந்திரமாக நடமாடுகின்றீர்கள். நாங்கள் தனிப்பட்ட முறையில் பலிவாங்கல்களை மேற்கொள்ளவில்லை, ஆனாலும் நீங்கள் அனைவரும் சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்பதனையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும், நேற்று நீண்ட நாள் தூக்கத்தில் இருந்து விழித்தவரைப் போல் மகிந்த ராஜபக்ச திடீரென வந்து, நாட்டை நல்லாட்சி விற்றுக்கொண்டிருக்கின்றது என கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த கால ஆட்சியில் என்ன நடந்தது என்பது அவருக்கு மறந்து விட்டது போல. மகிந்தவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் “கடை உண்டு பொருள் இல்லை” என்ற நிலை ஏற்பட்டு இருக்கும் என்பதை இப்போது கோஷமிடும் எவரும் மறக்க வேண்டாம்.
நாட்டில் நீதி என்பது சிறிதளவும் கடந்த காலத்தில் இருக்கவில்லை, தனி இலாபங்களுக்காகவே ஆட்சி நடைபெற்றது.
இவை அனைத்தையும் மாற்றியமைத்து மக்களை முன்னேற்றுவதற்காக சரியான தொரு வரவு செலவு திட்டம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்ற மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய நல்லதொரு வரவு செலவு திட்டம் இதற்கு முன்னர் கொண்டு வரப்படவில்லை என்பதையும் மறந்து விடாதீர்கள்.
எவ்வாறாயினும் கடந்த காலத்தில் ராஜபக்சர்களுடன் சேர்ந்து நீங்கள் செய்த பாவங்களை எங்கு சென்றும் போக்க முடியாது, என்பதை நினைவில் வைத்து கொண்டு பாராளுமன்றத்திற்கு வாருங்கள் எனவும் அகில விராஜ் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது உரையைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பல்வேறு வகையான கோஷங்கள் எழுப்பப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.